மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கயிறு இழுத்தல் போட்டி கடந்த 2024.05.05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.தி. திரேஸ்குமார் அவர்கள், வவுனியா மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ச. அரவிந்தன் மற்றும் விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் வீரவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர ஏனைய நான்கு மாவட்ட வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் வவுனியா மாவட்டம்,யாழ்ப்பாண மாவட்டம், மன்னார் மாவட்டம் அணியினர் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
மாகாண மட்டத்தில் பெண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டம்,கிளிநொச்சி மாவட்டம், வவுனியா மாவட்டம் அணியினர் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்pடனர்.
இப் போட்டியில் கலந்து கொண்ட ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களில் முதலாம் இடத்தினைப் பெற்ற அணிகள் எதிர்வரும் யூன் மாதம் 1ம், 2ம் திகதி பதுளையில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழா கயிறு இழுத்தல்  போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.