மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலக பிரிவில் மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்ட கீரிசுட்டான் கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 18.07.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கீரிசுட்டான் கிராமத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன் மற்றும் மடு பிரதேச செயலாளர் திரு பீட் நிஜாகரன், விவசாய திணைக்கள உதவி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், அப்பகுதி கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாயப் பெருமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பிரதி விவசாயப்பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தெரிவு செய்யப்பட்ட மாதிரி கிராமத்திற்கு வழங்கப்படும் உள்ளீடுகள் தொடர்பாகவும் அவற்றின் பயன்கள் பற்றியும் கருத்துரை வழங்கியதுடன் பயிர்ச்செய்கையை கைவிடாது தொடர்ந்தும் அதனை செயற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மடு பிரதேச செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட மாதரிக்கிராமமான கீரிசுட்டான் கிராமத்திற்கான இத் திட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து வெற்றிகரமாக இச்செயற்பாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் தமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இத்திட்டம் தொடர்பான முன்னேற்றங்களை கண்காணித்து தனக்கு அறிக்கையிடுவார்கள் என கூறினார்.

மேலும் இந் நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்த வட மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்கள் இது போன்ற சிறப்பான திட்டங்களைப்பெற்று கிராமத்தை அபிவிருத்தி செய்வதுடன் இப்பிரதேசத்தின் மாதிரி கிராமமாக இக்கிராமம் திகழ வேண்டும் என்றும், இப்பழமரச் செய்கையானது சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் பதிவு செய்து வெற்றிகரமாக முன்னெடுக்கும் படியும் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாகாண விவசாயப் பணிப்பாளர் விவசாயப் பெருமக்களிடம் விவசாய நடவடிக்கைகளுக்கான சவால்களும் மற்றும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்தார்.

அதன் பின் மரக்கன்றுகளை வைத்து எவ்வாறு பராமரிப்பதும்,அதற்கான பசளைகளை இடுவதும், தொடர் கத்தரித்தலும் தொடர்பான விடயங்களை பாட விதான உத்தியோகத்தர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து இத்திட்டத்தில் பப்பாசி செய்கைக்காக 9 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒருவருக்கு 96 பப்பாசிக்கன்றுகள் வீதமும் மாமரச் செய்கைக்காக 9 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒருவருக்கு 20 மாமரக்கன்றுகள் வீதமும் வீட்டுத்தோட்ட செய்கைக்காக 45 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக ஒட்டுமா, ஒட்டுப்பலா, உக்குரச, இனிப்புத்தோடை என தலா ஒரு கன்று எனும் அடிப்படையில் வழங்கப்பட்டன. அத்துடன் 2 பயனாளிகளுக்கு ¼ ஏக்கர் செய்கைக்குரிய பூசணி விதைகளும் 2 பயனாளிகளுக்கு ¼ ஏக்கர் செய்கைக்குரிய MICHHY 1 மிளகாய் விதைகளும் 17 பயனாளிகளுக்கு தலா ½ ஏக்கர் வீதம் மொத்தம் 8½ ஏக்கருக்கு நிலக்கடலையும் வழங்கப்பட்டது. பழமரச்செய்கையில் அறுவடை இழப்பினை தடுக்கும் முகமாக வாயுத்துப்பாக்கி 2 பயனாளிகளுக்கு 50 வீத விசாயிகள் பங்களிப்புடன் வழங்கப்பட்டன.

இவ் பிரிவுக்கு பொறுப்பான விவசாயப்போதனாசிரியர் திரு.L. இராஜசிங்கம் அவர்களால் ஓழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வானது உள்ளீடுகள் வழங்கல் வைபவத்தினை தொடர்ந்து உதவி விவசாயப்பணிப்பாளர் அவர்களது நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.