மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களுக்கெனத் தொகுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் லலித் பண்டார அவர்களிடம் நேற்று (10.12.2025) புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மயிலிட்டி முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்புடன் இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்றுப் புதன்கிழமை மதியம் ஆளுநர் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இதனையடுத்து, வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த உடனடிப் பணிப்புரைக்கு அமைவாக, அப்பொதிகள் நேற்றைய தினமே கண்டி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண ஆளுநர் செயலக உதவிச் செயலாளர் க.ஏகாந்தன் ஆகியோரால் அப்பொருட்கள் கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன.




