மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தைநல மருத்துவ விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு என்பனவற்றை உள்ளடக்கியதான மருத்துவ விடுதித் தொகுதியும், மருத்துவர்களுக்கான தங்குமிடம் என்பனவும் படிப்படியாக வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் அடுத்த ஆண்டிலிருந்து அமைக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் இன்று புதன்கிழமை காலை (08.10.2025) நடைபெற்றது. கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி மன்னார் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டிருந்தார். அதற்கு அமைவாக தொடர்புடைய அரச திணைக்களங்களினது பங்கேற்புடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு நீண்ட காலமாக மருத்துவ விடுதிகள் அமைக்கப்படவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தற்போது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்படும் மருத்துவ விடுதிக்கு மேலதிகமாக, விடுதித் தொகுதி தேவை என கோரப்பட்டது. அதற்கு இணக்கம் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் கட்டம் கட்டமாக அவற்றை முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்தார். அடுத்த ஆண்டிலிருந்தே இதற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல, மருத்துவமனைக்கு சிரி ஸ்கானர் இயந்திரம் தேவை என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஆளுநர் தெரிவித்தார். மேலும், சுத்திகரிப்பு பணியாளர்கள், மின்னிணைப்பாளர்கள் போன்றவற்றுக்கான வெற்றிடங்களை வெளியகச் சேவையூடாகப் பூர்;த்தி செய்வதற்கான அனுமதியை வழங்குவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்துவதாக ஆளுநர் தெரிவித்தார்.

இதேநேரம், மாவட்ட மருத்துவமனையின் கீதம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் புனரமைப்புச் செய்யப்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் ஆளுநரால் திறந்தும் வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண பிரதம செயலர், மன்னார் நகர சபையின் கௌரவ தவிசாளர், மன்னார் மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், மன்னார் மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர், மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் செயலர் ஆகியோர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.