பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் சின்னவலையன்கட்டு மற்றும் பரசன்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், மக்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த திட்டங்களைப் பரிசீலித்து அவர்களின் தொழில் மேம்பாட்டுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டம், மடு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சின்னவலையன்கட்டு மற்றும் பரசன்குளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வியாழக்கிழமை (26.03.2026) ஆளுநர் அவர்கள் நேரில் களப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ, மடு பிரதேச செயலாளர் ஆர்.சி.அமல்ராஜ், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மே.சாந்தசீலன் ஆகியோரும் ஆளுநருடன் இணைந்திருந்தனர்.
சின்னவலையன்கட்டு மற்றும் பரசன்குளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை நேரில் சந்தித்து ஆளுநர் விரிவாகக் கலந்துரையாடினார். இதன்போது பல ஆண்டுகளாக குளங்கள் தூர்வாரப்பட்டுப் புனரமைக்கப்படாமை, கழிவு நீக்க வாய்க்கால்கள் சீர்செய்யப்படாமை, போக்குவரத்துச் சீரின்மை, மின்சார வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் குறித்து மக்கள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
மேலும், தங்களின் பொருளாதார மேம்பாட்டுக்குச் சிறுகைத்தொழில் முயற்சிகளுக்கான உதவிகள், நெல் உலர்த்துவதற்கான வசதிகள், விவசாய மற்றும் போக்குவரத்து வீதிகளின் புனரமைப்பு ஆகியவற்றை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை விடுத்தனர். தமது கிராமத்திலிருந்து வவுனியாவுக்கான பேருந்து சேவை தினசரி ஒரு தடவை மட்டுமே இடம்பெறுவதாகவும், அதனை அதிகரித்துத் தருமாறும் மக்கள் கேட்டுக்கொண்டனர். அத்துடன், வவுனியாவுக்கான வீதியின் இரு பக்கமும் பற்றைக்காடுகளாகக் காணப்படுவதால் யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அவற்றைத் துப்பரவு செய்து தருமாறும், வீதி விளக்குகள் மற்றும் விளையாட்டு மைதானத்துக்கு மின்விளக்கு பொருத்தித் தருமாறும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சின்னவலையன்கட்டு கிராமத்தில் பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் உள்ள 220 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான வீதி, பிள்ளையார் கோவில் வீதி மற்றும் சின்னவலயன்கட்டிலிருந்து முள்ளிக்குளம் செல்வதற்கான வீதி உள்ளிட்டவற்றை ஆளுநர் நேரில் பார்வையிட்டார். போரின் பின்னர் மக்கள் முற்றாக வெளியேறிய நிலையில் காணப்படும் வள்ளியாப்பளை கிராமத்தில், மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அக்கிராமத்தில் காணப்படும் வள்ளியாப்பளை குளம் வனவளத் திணைக்களத்தின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமையால், அதனை விடுவிப்பது தொடர்பிலும் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.
பறங்கியாற்றிலிருந்து வரும் நீரைத் தங்கள் இரு கிராமங்களிலுமுள்ள ஐந்து விவசாயக் குளங்களை நோக்கித் திசை திருப்பினால் விவசாய நடவடிக்கைகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என விவசாயிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடன் ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இக்கிராமங்களில் எள்ளு உற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லாமையால் கிராமத்துக்கு வரும் வர்த்தகர்கள் மிகக் குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்து செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மக்களின் இக்கோரிக்கைகளைச் செவிமடுத்த ஆளுநர், இக்கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கொள்வனவு மையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், முன்னணி நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த விவசாயத் திணைக்கள அதிகாரிகள் உதவிகளை வழங்குவார்கள் என்றும் உறுதியளித்தார்.
முதற்கட்டமாக, பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காளான் வளர்ப்புக்கான உள்ளீடுகளை வழங்குதல், சிறந்த ஆர்வமுள்ள விவசாயி ஒருவருக்குப் பசுமைக்குடில் ஊடான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியன தொடர்பில் சாதகமாக ஆராய்வதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
மடு வலயத்துக்குட்பட்ட காக்காயன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம், சின்னவலையன்கட்டு அ.த.க. பாடசாலை மற்றும் சின்னவலையன்கட்டு வளர்நிலா முன்பள்ளி ஆகியவற்றுக்கும் ஆளுநர் களப் பயணம் மேற்கொண்டார். இதன்போது பாடசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வகுப்பறை வசதிகள் மேம்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
போக்குவரத்து வசதிகளற்ற இப்பின்தங்கிய கிராமங்களில் தொடர்ச்சியாக 8 வருடங்களுக்கு மேல் இடமாற்றமின்றிப் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது குறைகளை ஆளுநரிடம் முன்வைத்தனர். வெளிமாவட்டங்களில் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் பணியாற்றியவர்கள் கூடத் தங்கள் சொந்த மாவட்டங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், தங்களுக்கு வலயத்தினுள் உள்ளக இடமாற்றங்களை மேற்கொண்டு போக்குவரத்து வசதியுள்ள இடங்களுக்கு மாற்றித் தந்திருந்தால் கூடப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கோரிக்கைகளுக்குப் பதிலளித்த ஆளுநர், வீதிகளைக் கட்டம் கட்டமாகப் புனரமைத்து மக்களின் பயன்பாட்டுக்குக் கையளிக்க உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என உறுதியளித்தார். அத்துடன், வவுனியாவுக்கான வீதியிலுள்ள பற்றைகளைத் துப்புரவு செய்வதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கிராமங்களை மேம்படுத்துவதுதான் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான திட்டமாகும். சிறந்த முயற்சியாளர்கள் இருந்தால்தான் கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியும். முதலில் உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்து நல்ல நிலைக்குக் கொண்டு வாருங்கள். அவர்களின் கல்விக்காக நாங்கள் சகல வசதிகளையும் ஏற்படுத்தித் தருகின்றோம்.
எமக்கு மத்திய அரச நிர்வாகம், மாகாண அரச நிர்வாகம் என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைத்துத் திணைக்களங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்தே கிராம மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும். அதனால்தான் இன்று மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் எம்மோடு இணைந்து வந்துள்ளார்கள். இந்த கிராமத்தை ஓரிரு வருடங்களில் அபிவிருத்தியடைந்த ஒரு முன்மாதிரியான கிராமமாக நீங்கள் மாற்றிக் காட்ட வேண்டும். அதற்கான முழுமையான உதவிகள் எம்மால் வழங்கப்படும், என்றார்.






