மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் குளப் புனரமைப்புப் பணிகளின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிடுவதற்கு ஏதுவாக பொது மக்கள் பாதுகாப்பு கௌரவ அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29.04.2026) புதன்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் கே.கனகேஸ்வரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேகம் திருப்தியளிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார். ‘குறிப்பாக வீதி அபிவிருத்திப் பணிகள் எதிர்பார்த்தவாறு நடைபெறவில்லை. தேசியப் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் உரிய காலத்தில் செலவு செய்யப்படவில்லை. திறைசேரியால் போதுமான நிதி விடுவிக்கப்பட்டாலும், திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்யாமல் அதிகாரிகளால் வெறுமனே காரணங்கள் மட்டுமே கூறப்படுகின்றன.
நான் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருக்கின்றேன். மன்னார் மாவட்டத்தில்தான் 2024ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வர முன்னர் இருந்த நிலையிலேயே சில அதிகாரிகள் தொடர்ந்தும் செயற்படுகின்றனர். அவர்கள் பழைய அரசியல்வாதிகளுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டு, இங்கு நாம் கூறுபவற்றுக்குத் தலையாட்டிவிட்டு, பின்னர் அந்தப் பழைய அரசியல்வாதிகளுடன் இணைந்து மக்களின் அபிவிருத்திப் பணிகளைச் செய்ய மறுக்கின்றனர். அந்தத் தொடர்புகளை உடனடியாகத் துண்டியுங்கள். இங்கு என்ன நடக்கின்றது என்பதை நாம் அறியாமல் இல்லை’ என அதிகாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான புதிய திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது, சுற்றுலா மேம்பாடு, விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு, பிரஜா சக்தி செயற்றிட்டம், பன்முகப்படுத்தப்பட்ட பாதீடு, இறங்குதுறை எல்லை நிர்ணயம், எல்லை மீள் நிர்ணயம், ‘சார்ப்’ திட்டத்தின் கீழான குளப் புனரமைப்பு, போக்குவரத்து அமைச்சின் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியனவற்றுக்கான அனுமதிகள் தொடர்பில் விரிவாக விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மேலும், மன்னாரில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றம் குறித்தும், கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலை குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னைய தீர்மானத்துக்கு அமைவாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன்னேற்றம் தொடர்பில் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கூராய்க்குளம் விவகாரம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மணல் அகழ்வு தொடர்பில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்ட பின்னரும், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்வதாக உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
நேரமின்மை காரணமாக இன்றைய கூட்டத்தில் சில விடயங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த மணல் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய முக்கிய விடயங்களை ஆராய்வதற்காக அடுத்த மாதமே விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்றை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், து.ரவிகரன், உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாணத் திணைக்களப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், மத்திய திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






