மன்னார் மாவட்டத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவம், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் நேரில் ஆய்வு

மன்னார் நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம், மன்னார் பாலத்தடி சுற்றுலாப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நீலாசேனை மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (25.09.2026) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இக்களப் பயணத்தில் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், மன்னார் நகரப் பிரதேச செயலர் கே.காந்தீபன் மற்றும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சாஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவது கட்டமாக, குருசுநகர்–சின்னக்கடை பகுதியில் அமைந்துள்ள மன்னார் நகர சபைக்குச் சொந்தமான திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது மன்னார் நகர சபையின் செயலாளரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்நிலையத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் அருகிலுள்ள மக்கள் துர்நாற்றத்துக்கு முகம்கொடுத்து வருவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் மதில்களை உயர்த்துவதற்கான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது.

மேலும், அங்குள்ள கழிவுக் குவியல்கள் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனிடையே, வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் 80 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள எரியூட்டிக் கட்டமைப்பு மற்றும் மறுசுழற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களையும் ஆளுநர் நேரில் பார்வையிட்டார்.

அத்துடன், மன்னார் நகர சபை தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த பகுதி மிக மோசமான கழிவுக் குவியலாக மாறிவிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

கடந்த காலங்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகளைக் கொள்வனவு செய்து வந்த நிறுவனம் தற்போது அவற்றைக் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கலாசார மண்டபத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியையும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பான கோரிக்கையை உரிய அமைச்சிடம் முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மன்னார் பாலத்தடியில் நகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கைப் பூங்காவின் அபிவிருத்திப் பணிகளையும் ஆளுநர் பார்வையிட்டார். பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து வனஉயிரினத் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள பார்வைத் தளத்தையும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர், நீண்டகாலமாக காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வரும் நீலாசேனைப் பகுதிக்கு ஆளுநர் நேரில் சென்று நிலைமைகளை கேட்டறிந்தார்.

கட்டுக்கரைக் குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் குறித்த குடியிருப்புகள் அமைந்துள்ளமையால், அவை தொடர்பில் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நீண்டகாலமாக அப்பகுதியில் மக்கள் குடியிருந்து வருவதால், அவர்களுக்குரிய காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்த ஆளுநர், நிலஅளவை வரைபடத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட தரப்புகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து, நிலைமையை முழுமையாக ஆராய்ந்து உரிய தீர்மானத்தை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளை நேரில் அவதானித்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்றைய களப்பயணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.