வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் (பாகம்-1) இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் 29 பெப்பிரவரி 2020 சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் கலை, கலாசாரப் பீடாதிபதியும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத் தலைவருமான பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும் கலந்து சிறப்பித்தனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மன்னார் மாவட்ட நாட்டுக்கூத்துக் கலைஞர்கள் விருந்தினர்களை வரவேற்றனர். மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் வெளியீட்டுரையாற்றினார். நூல் மற்றும் இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றது.
சிறப்பு நிகழ்வுகளாக யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு.த.றொபேட் அவர்களதும், அவரது கலைஞர்களினதும் வாசகப்பா நாடக இசை நுட்பங்கள் நிகழ்வும், என்றிக்கு எம்பரதோர் நாடகத்திலிருந்து சில காட்சிகளும் கலைஞர்களினால் ஆற்றுகைப்படுத்தப்பட்டன. அத்துடன் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் (பாகம்-1) இறுவட்டு மற்றும் நூல் தயாரித்த அருட்தந்தை செ.அன்புராசா, அருட்திரு.தமிழ்நேசன் அடிகளார் அவர்களுடன் பதினெட்டு கலைஞர்களும் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர். அம்மாவட்ட அண்ணாவியர்கள், நாட்டுக்கூத்து கலைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.