வடக்கு மாகாணத்தின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வழமையான மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்கு அப்பால், மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களிடமிருந்தும் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இப்போதே திட்டங்களைத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட உயர்மட்டக் கூட்டம் இன்று (23.12.2025) செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்துப் பேசிய ஆளுநர், ‘எமது அலுவலர்கள் பலர் முடிவுகளை எடுப்பதற்குத் தயங்குகின்றனர். எங்கே தங்கள் ஓய்வூதியம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. நாம் மக்களுக்காக நேர்மையாகச் செயற்படும்போது எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அதிகாரிகள் துணிவாகவும், விரைவாகவும் முடிவெடுத்துச் செயலாற்ற வேண்டும்’ என வலியுறுத்தினார்.
அண்மையில் ஏற்பட்ட இடர் நிலைமையின்போது பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள், அமைச்சின் செயலாளர் மற்றும் ஆணையாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டிருந்ததை ஆளுநர் பாராட்டினார்.
அதேவேளை, ‘ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் இடர் மீட்பு பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தின. தேவையான நிதியைத் தர நாம் தயாராக இருந்தும், பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்களிடம் நிதி கோரியமை ஏற்கக்கூடியதல்ல. ‘பசியிலிருக்கும் ஒருவனுக்கு உடனடியாக உணவு வழங்க வேண்டும்; இரண்டு நாட்களுக்குப் பின்னர் வழங்குவது பயனற்றது.’ அதுபோலவே பேரிடர் நேரங்களில் துரித கதியில் செயற்பட வேண்டும்’ என ஆளுநர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ், 2026ஆம் ஆண்டிற்கான துறைசார் நிதி ஒதுக்கீடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது:
வீதி அபிவிருத்தித் திணைக்களம்: 1,132 மில்லியன் ரூபா
உள்ளூராட்சித் திணைக்களம்: 943 மில்லியன் ரூபா
வீடமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை: தலா 151 மில்லியன் ரூபா
காணி, கிராமிய அபிவிருத்தி மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து: தலா 38 மில்லியன் ரூபா
வீடமைப்புக்கான பயனாளிகளைத் தெரிவு செய்யும்போது பிரதேச செயலகங்களுடன் இணைந்து இறுதி செய்யப்பட வேண்டும்.
மாகாண சுற்றுலாத்துறை பணியகம் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்கள் தமக்குரிய வருமானங்களைத் திரட்டுவதற்கு, பொதுக் கணக்காய்வு ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி மற்றும் திட்டமிடல்), துறைசார் பணிப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









