மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச் சென்ற முற்போக்குச் சிந்தனைகள், இன்றும் எமது சமூகத்தில் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (11.12.2025) மாலை நடைபெற்றது.

இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சிறீ சாய்முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

டித்வா பேரிடரால் எமது மாகாணம் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான சூழலில், இந்நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் தருணத்தில், வடக்கு மாகாண மக்கள் சார்பாக இந்திய அரசாங்கத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது மக்கள் அனர்த்தத்தைச் சந்தித்தபோது, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் எனப் பல்வேறு விடயங்களில் முதலாவது நாடாக இந்தியா எமக்குக் கரம் கொடுத்திருக்கின்றது. அந்த உதவியை நாம் என்றும் நினைவில் கொள்வோம்.

பாரதியார் இந்தியாவில் பிறந்திருந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவையானது அவரை ஒரு பிராந்தியக் கவிஞராக அல்லாமல், உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் ஒரு ஆளுமையாக மாற்றியிருக்கிறது. எமது சிறுபராயத்தில் பேச்சுப் போட்டிகள் என்றால், பாரதியார் இல்லாத தலைப்புகளே இருக்காது என்னும் அளவுக்கு அவர் எம்முடன் ஒன்றிப்போயுள்ளார்.

நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் பாரதி. அவர் ஒரு சிறந்த கவிஞராக மட்டுமல்லாமல், இந்திய தேச விடுதலிக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு போராளியாகவும் திகழ்ந்தார். தனது கனல்தெறிக்கும் பாடல்கள் மூலம் மக்களிடத்தில் தேசபக்தியையும், விடுதலை உணர்வையும் ஊட்டினார்.

பல மொழிகளைக் கற்றறிந்த பன்மொழிப் புலவராகத் திகழ்ந்த அவர், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ எனத் தமிழுக்கு மகுடம் சூட்டினார். இவ்வுலகில் அவர் வாழ்ந்தது குறுகிய காலமே என்றாலும், அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. அதனால்தான் நூற்றாண்டு கடந்தும் அவர் இன்றும் நம்மால் போற்றப்படுகின்றார், என்றார்.

இந்நிகழ்வில் யாழ். தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.