இலங்கையின் தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (16.01.2026) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘அகன்று செல்’ என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இம்மாபெரும் மக்கள் பேரணியில் மாண்புமிகு ஜனாதிபதி, அமைச்சர்களுடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டார்.
யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் அவர்கள் உரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போதைப்பொருள் பாவனைக்கு எதிராகச் சமூகம் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டி, ஜனாதிபதி அவர்கள் கௌரவிப்புக்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக, போதைப்பொருட்களிலிருந்து விலகி இருப்போம் எனவும், சமூகத்தைப் பாதுகாப்போம் எனவும் உறுதியளிக்கும் ‘சத்தியப்பிரமாணம்’ ஜனாதிபதி முன்னிலையில் ஆயிரக்கணக்கான மக்களால் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாகச் சிறப்புரையாற்றிய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ‘எதிர்காலச் சந்ததியைப் பாதுகாப்பதற்குப் போதைப்பொருள் ஒழிப்பு இன்றியமையாதது. சட்ட நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மக்கள் ஒவ்வொருவரும் ‘அகன்று செல்’ என்ற சிந்தனையுடன் இந்தப் போதைப் பொருட்களிலிருந்து விலகி நிற்க வேண்டும்’ எனத் தனது உரையில் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜயபால, யாழ். மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பெருந்திரளான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.










