வளம் நிறைந்தும் வறுமையில் முதலிடம் வகிக்கும் முல்லைத்தீவு மாவட்டம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக மிகப் பெரிய அபிவிருத்தியை அடையும். அதற்கான அடிப்படைத் திட்டங்கள் மற்றும் கட்டுமானங்கள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (11.02.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளுநர் தனது உரையில், வடக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பையும், இயற்கை வளங்களையும் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு விளங்குகின்றது. இருப்பினும், வறுமைச் சுட்டியில் இது முதலிடத்தில் இருப்பது வேதனையானது. பின்தங்கிய நிலையிலுள்ள இம்மாவட்டத்தை மீட்டெடுக்கும் பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் துரிதப்படுத்தப்படும். மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் வடக்கு மக்கள் மீது கொண்டுள்ள விசேட கரிசனையை, நாம் எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கொக்கிளாய் – புல்மோட்டை பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாய்வு அறிக்கையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்தால், பாலத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் மிகுந்த அக்கறையுடன் உள்ளார், எனக் குறிப்பிட்டார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலர், முல்லைத்தீவு மக்களின் நீண்டகாலக் கனவாக இருந்த வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து வசதி இல்லாமலிருந்த குறையும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த ‘டித்வா’ பேரிடரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியனவற்றைப் புனரமைப்பதற்கான கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.திலகநாதன், து.ரவிகரன், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், அமைச்சுடன் தொடர்புடைய திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



