பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

நாட்டில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, வழிபாட்டு தலங்களுக்கான அன்பளிப்புகளை வழங்கும் போதே கௌரவ ஆளுநர் இதனை கூறினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் மத வழிபாட்டு தலங்களுக்கான  அன்பளிப்புகளை கையளிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (09.01.2024) நடைபெற்றது. நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவில், ஆவரங்கால் சிவன் கோவில், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை, இளவாலை புனித பிலிபேரிஸ் தேவாலயம் ஆகியவற்றுக்கான அன்பளிப்பு பொருட்கள் கௌரவ ஆளுநரால் வழங்கிவைக்கப்பட்டது.

அன்பளிப்பு பொருட்களை வழங்கிவைத்த கௌரவ ஆளுநர், வருகைதந்த மத குருமார்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினருடன் கலந்துரையாடினார். மதங்களிடையே பூசல் உருவாக இடமளிக்க கூடாது எனவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மத ஒற்றுமை அவசியம் எனவும் கூறினார்.

கௌரவ ஆளுநரின் கருத்துக்களை கேட்டறிந்த மத குருமார், மத ஒற்றுமை மற்றும் இனக்களுக்கு இடையிலான ஐக்கியத்தை கட்டியெழுப்ப கௌரவ ஆளுநர் முன்னேடுக்கும் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த செயற்பாடுகளுக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.