யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள், வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (03.12.2025) காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் ஆளுநரிடம் குறிப்பிட்டார்.
உடனடி உதவிகள் (நிவாரணம்), மீள்கட்டுமான உதவிகள் (வாழ்வைக் கட்டியெழுப்புதல்), நிரந்தரத் தயார்ப்படுத்தல் (எதிர்கால இடர்களை எதிர்கொள்ளல்).
வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்கினால், உதவிகளை விரைந்து வழங்க முடியும் என்று கொன்சியூலர் ஜெனரல் கேட்டுக்கொண்டார்.
அழிவடைந்த உட்கட்டுமானங்களின் சேத விவரங்களையும் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இத்தகைய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேரிடர்களின் போது எப்போதும் முதலாவதாக கைகொடுப்பது இந்தியாதான் என்று குறிப்பிட்ட ஆளுநர், அதற்காக மாகாண மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் கூடுதலான அழிவுகளையும், அதிக உட்கட்டுமான அழிவுகளையும் எதிர்கொண்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
இறங்குதுறைகள், போக்குவரத்து வீதிகள், பாலங்கள், சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் என பல்வேறு உட்கட்டுமானங்கள் அழிவடைந்துள்ள விவரங்களை அவர் முன்வைத்தார்.
வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் முகாம்களிலிருந்து படிப்படியாக வீடுகளுக்குத் திரும்புகின்றனர். பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்காக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர்பாகவும், மக்களின் வாழ்வாதாரம் சில இடங்களில் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
பேரிடரின்போது இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கொன்சியூலர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.
தினமும் நிவாரணப் பொருள்களுடன் விமானங்கள் வருகின்றமையையும், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் கொழும்பை வந்தடைந்துள்ளமை தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


