வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால், பொருளாதார நெருக்கடி வாய்ந்த இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்க்கையானது ஓர் சவால் மிக்கதாக உள்ளமையால் பெற்றோர் உடல் உள ரீதியாக மிகவும் சோர்வடைந்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை காணப்படுவதுடன் குழந்தை வளர்ப்பு சார்ந்த போதிய அறிவுத்திறன் இல்லாமை, குடும்ப வருமானத்திற்கு ஏற்ப குடும்ப வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் உள்ள சிரமம், குழந்தைகளின் மனோநிலையை புரிந்து கொண்டு அவர்களை அனுசரித்து செல்லும் திறன் போன்ற பல வகையான உளப்பிரச்சனைகளை ஒவ்வொரு பெற்றோரும் தமது நாளாந்த வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இவற்றை விட பாலினம் சார்ந்த சமுதாய சீர்கேடுகள், மது, போதைவஸ்து பாவனை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக ஏற்படும் பாலின ரீதியான பாதிப்புக்கள்(கையடக்கத் தொலைபேசி, இணையத்தளம் மற்றும் ஏனைய தொழில்நுட்ப ரீதியானவை) போன்றவற்றால் சமூகத்தில் ஒவ்வொருவரும் உளரீதியான கடும் போராட்டத்திற்கு ஆளாவதால் இது தொடர்பான விழிப்புணர்வு சார்ந்த பயிற்றுநர்களுக்கான பயிற்சிப்பட்டறையானது (ToT) நல்லூர் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் வழிகாட்டலில் உதவிச்செயலாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்று நிறைவுக்கு வந்தள்ளது. இப் பயிற்சிப் பட்டறையில் வடமாகாணத்தில் உள்ள 29 உத்தியோகத்தர்களுக்கு நான்கு நாட்களைக் கொண்டு, முதற்கட்டமாக ஐப்பசி மாதம் 03ஆம் 04ஆம் திகதிகளிலும் 2ஆம் கட்டமாக 23ஆம், 24ஆம், 25ஆம் திகதிகளிலும் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக Dr. திரு.கனகரட்ணம் சிவசுதன்(DMO -பிரதேச வைத்தியசாலை, அம்பன்) மற்றும் வைத்திய கலாநிதி யோசபீன் திருமகள் சிவசங்கர்(சமுதாய மருத்துவ நிபுணர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, கிளிநொச்சி) ஆகியோர் வருகை தந்து பயனுறுதி வாய்ந்த பயிற்றுநர்களுக்கான பயிற்சிப்பட்டறையை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.