பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை வயல் விழா

மன்னார் மாவட்டத்தின் இரணைஇலுப்பைகுளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பூசாரியார்குளம் எனும் இடத்தில் பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தி அறுவடை வயல் விழாவானது 27.03.2025 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.பிரியதர்சினி றமணேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.சு.செந்தில்குமரன், மடு பிரதேச செயலாளர் திரு.கே.பீட் நிஜாஹரன் அவர்களும் மற்றும் வெங்காய இனவிருத்தியாளர், உதவி விவசாய பணிப்பாளர் ஹெட்டியாராய்ச்சி, கமத் தொழில் மற்றும் விவசாய காப்புறுதி சபை உதவி பணிப்பாளர் எஸ்.திலீப்குமார், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப்போதனாசிரியர், தொழினுட்ப உதவியாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்பின் உறுப்பினர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தினர்.
மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் தனது தலைமை உரையில் மன்னார் மாவட்டத்தல் வெங்காயச் செய்கைக்கு உகந்த காலநிலை மற்றும் மண் காணப்பட்ட போதிலும் இங்கு சின்ன, பெரிய வெங்காயச் செய்கை மிக குறைந்த விஸ்தீரணத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் மாவட்டத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதுடன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏனைய மாவட்டத்தில் அல்லது மாகாணத்தில் அல்லது இறக்குமதியிலேயே தங்கியிருக்கவேண்டியுள்ளது எனவும் இனிவரும் காலத்தில் அவ்வாறு தங்கியிருக்காது எமக்கு வேண்டிய வெங்காயத் தேவையை நாமே நிவர்த்தி செய்யக் கூடியவாறு வெங்காயச் செய்கையின் விஸ்தீரணத்தினை அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பெரிய வெங்காய உண்மை விதை உற்பத்தியை வெற்றிகரமாக மேற்கொள்ளும் போது குறுகிய காலத்தில் இலாபத்தினை ஈட்டக்கூடிய செய்கையாக காணப்படுகின்றது. இவ்வாறு நல்லமுறை உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காய உண்மை விதைகளை விவசாயிகளிடம் இருந்து எமது திணைக்களம் கொள்ளவனவு செய்து ஏனைய வெங்காயச் செய்கையில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விருந்தினராக கலந்து கொண்ட மடு பிரதேச செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எமது நாட்டின் அந்நியசெலாவணியில் பெரிய வெங்காய இறக்குமதி பெரும்பான்மை பங்கு வகிக்கின்றது. எனவே பெரிய வெங்காயச் செய்கையின் விஸ்தீரணத்தினை எமது மாவட்டத்தில் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வினை இரணைஇலுப்பைகுள விவசாயப்போதனாசிரியர் திரு.சி.சிவராம் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார்.