புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர்  (Andrew Traveller), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (21.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகர் கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார். மாகாணத்தின் கல்வி, பொருளாதார, வாழ்வியல்நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பிலும், முதலீட்டு வலயங்களை ஸ்தாபித்தல் தொடர்பிலும் கௌரவ ஆளுநரால் தெளிவுப்படுத்தப்பட்டது. அத்துடன் புலம்பெயர் தேசத்து உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.