புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி

வவுனியா மாவட்டத்தில் தோணிக்கல் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தாண்டிக்குளம் கிராமத்தில் திரு .M. தேவராசா எனும் விவசாயியின் நெற்காணியில் 17.07.2025 அன்று காலை 9:00 மணியளவில் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி J.M. முரளீதரன் அவர்களின் நெறிப்படுத்தலில் திரு கு.கஜரூபன் (பாடவிதான உத்தியோகத்தர் – நெல்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாயப் போதனாசிரியர் திரு. சு.தர்சன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு P.A சரத்சந்திர பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு கமலதாசன், மாவட்ட புள்ளி விபரவியலாளர் திரு யூட் நேசராஜா, கோவில்குளம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி காஞ்சனா, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், பொது மக்கள் எனப்பலரும் பங்குபற்றி இருந்தனர்.

இவ் வயல் விழா நிகழ்வில் பரசூட் முறையிலான நெற்செய்கை களத்தினை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து பரசூட் முறையிலான நெற் செய்கையினை மேற்கொண்ட விவசாயியான திரு M. தேவராசா அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில் வீசி விதைப்பு முறையினை விட பரசூட் முறையில் நெற் ;செய்கையினை மேற்கொள்ளும் போது நெற்;செய்கைக்கான உற்பத்தி செலவு குறைவாக காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து நெற்பயிருக்கான பாடவிதான உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு கு.கஜரூபன் அவர்களால் பரசூட் முறையிலான நெற்செய்கை தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமான நெற்செய்கை வயல் விழாவாக இது கொண்டாடப்பட்டது, தாண்டிக்குளத்தைச் சேர்ந்த முற்போக்கான குறித்த விவசாயி பரசூட் நடவு முறையைப் பயன்படுத்தி ஹெக்டயருக்கு 9 தொன் சிறந்த விளைச்சலைப் பெற்றுள்ளார். இது நெற்செய்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அதிக விளைச்சலைத் தரும் நெல் இனமான பி.ஜி 374 செய்கைக்காக பயன்படுத்தப்பட்டது, இப் பரசூட் முறையானது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் அதே நேரம் உள்ளீடுகளுக்கான செலவுகளைக் குறைக்கின்றது. இதனால் பிரதேச விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை வழங்குகின்றது.

தொடர்ந்து பிரதி விவசாயப்பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பரசூட் முறையிலான நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு ஏனைய விவசாயிகளும் அடுத்து வரும் பெரும் போகத்தில் நெற்பயிர்ச் செய்கையில் குறித்த தொழில்நுட்ப முறையினை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட புள்ளிவிபரவியலாளர் அவர்களினால் குறித்த நெற்செய்கை கண்டத்தில் பயிர் விளைச்சல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் எனும் பெறுபேறு பெறப்பட்டது. இந் நிகழ்வானது காலை 11.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.