புங்குடுதீவில் ‘அபிவிருத்தி நோக்கிய பயணம் – புங்குடுதீவு 2025’ என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை நடைபெற்றது.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு எதிராக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை நாமும் சரிவரப் பயன்படுத்தி எமது பிரதேசத்திலும் உயிர்கொல்லி போதைப்பொருளை அடியோடு ஒழிக்கவேண்டும். இளைய சமூகத்தை அதிலிருந்து பாதுகாப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மக்களை நோக்கிய நிர்வாகம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சந்திப்பு, ‘அபிவிருத்தி நோக்கிய பயணம் – புங்குடுதீவு 2025’ என்னும் தொனிப்பொருளில் புங்குடுதீவு வடஇலங்கை சர்வதோய மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (30.10.2025) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் புங்குடுதீவு மக்களால் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. வீதித் திருத்தங்கள், கடற்போக்குவரத்து, இறங்குதுறை புனரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களங்களுக்குச் சொந்தமான வீதிகளின் புனரமைப்புத் தொடர்பில் தொடர்புடைய அதிகாரிகள் பதிலளித்தனர். உள்ளூர் வீதிகள் குறிப்பாக பிரதேச சபைக்குச் சொந்தமான 139 வீதிகளில் முன்னுரிமை அடிப்படையில் 10 வீதிகள் திருத்தத்துக்கான முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இவற்றை புனரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. குடிநீர் விநியோகக் குழாய்கள் பொருத்தப்பட்டும் குடிநீர் வழங்கப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மருத்துவமனையின் தேவைகள், வங்கிச் சேவைகளின் மேலதிக தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. குறிப்பாக கல்வி தொடர்பில் மிக நீண்ட நேரம் ஆராயப்பட்டது. பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக எதிர்காலத்தில் பாடசாலைகளை கொத்தணிகளாக்கி ஆளணிகளைப் பங்கிடுவதன் சாதக பாதகங்கள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மாணவர்கள் பாடசாலை நேரங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது பதிலளித்த ஆளுநர், ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதை ஒழிப்பு நடவடிக்கை ஊடாக எமது பிரதேசத்திலும் இதனைக் கட்டுப்படுத்தலாம் என்று குறிப்பிட்டதுடன் பொலிஸாரின் செயற்பாடுகளிலும் மிகப் பெரிய மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலர், பிரதேச சபையின் கௌரவ உபதவிசாளர், பிரதேச சபைச் செயலர், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.