பாரம்பரிய கலைச்சங்கமம் ஆரம்பம்

அழிந்து வரும் எமது பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்து அடுத்த சந்ததியினரிடம் கையளிப்பதற்கும், இளைய கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்குமான சிறந்ததொரு களமாகப் ‘பாரம்பரிய கலைச்சங்கமம்’ அமைந்துள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணத்தில் மறைந்து வரும் மற்றும் காலப்போக்கில் திரிபடைந்து வரும் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில், நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு நேற்றிரவு (23.08.2026) ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரமாண்டமான ‘பாரம்பரிய கலைச்சங்கமம்’ நிகழ்வில் தனது துணைவியாருடன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், பாரம்பரியமாகப் பேணப்பட்டு வரும் எமது கலை நிகழ்வுகள் முறையாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்துக்குப் பெருமை சேர்க்கும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாச் சூழலில், மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வானது பாரம்பரியக் கலைகளை வளர்ச்சியுறச் செய்யவும், பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வளவு தூரம் சிரமங்களுக்கு மத்தியில் ஆர்வத்துடன் வருகை தந்துள்ள கலைஞர்களை நான் பாராட்டுகின்றேன். குறிப்பாக, வவுனியா மாவட்டத்திலிருந்து வருகை தந்து நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்த கலைஞர்களுக்கும் பிள்ளைகளுக்கும் எனது நன்றிகள். ஆர்வமும் அர்ப்பணிப்பும் இல்லாவிட்டால் எந்தவொரு கலையையும் முன்னகர்த்த முடியாது. நீண்ட நேரம் காத்திருந்து இறைவனோடு சம்பந்தப்பட்ட பாடல்களையும், அழிந்து வரும் கலை வடிவங்களையும் இங்கே வெளிப்படுத்தியமை மிகவும் பெருமைக்குரியதாகும்’ எனத் தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஆளுநரின் ஆலோசனையுடன் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கலை நிகழ்வு, தற்போது பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடன் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. கலைச்சங்கமம் நிகழ்வில் ஏனைய மாவட்டக் கலைஞர்களும் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில், நேற்றைய முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

நல்லூர் திருவிழாவுடன் இணைந்து அடையாளப்படுத்தப்பட்ட சண்முக கீர்த்தனம், உடுக்கடித்துப் பாடுதல், வில்லுப்பாட்டு, இசை நாடகம், காத்தவராயன் கூத்து, கரகாட்டம், கும்மி நடனம், தமிழிசைப் பாடல், கிராமியப் பாடல், பறையிசை, ஒயிலாட்டம், காவடியாட்டம், வாத்திய சங்கமம் மற்றும் கோலாட்டம் ஆகிய 14 பாரம்பரிய கலை வடிவங்களுக்கான போட்டிகள் பகல் நிகழ்வாக நடைபெற்று வருகின்றன.

போட்டிகளில் முதலாமிடம் பெறுபவர்களுக்கு 30 ஆயிரம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாவும் 4,5 ஆம் இடங்கள் பெறுபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாவும் பரிசுத்தொகையாக வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வு குறித்து உரையாற்றிய கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சு, அமைச்சின் செயலாளர் மா.பற்றிக்டிறஞ்சன், தொன்மை வாய்ந்த தமிழ் கலாச்சாரத்தில் படிப்படியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத் திட்டமாகத் திருமணம், மரண நிகழ்வுகள் போன்ற சடங்கு முறைகளை எவ்வாறு முறையாகக் கையாள்வது என்பது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலாச்சார ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆராய்ந்து வருவதுடன், இதற்கான முறையான வழிகாட்டுதல்கள் விரைவில் எழுத்துருவில் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இம்மாபெரும் கலைச்சங்கமநிகழ்வில் கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சு, அமைச்சின் செயலாளர், பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர், கணக்காளர், கலாச்சார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.