வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளின் போது, மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்களுக்கிடையில் எவ்வித வேற்றுமைகளும் இன்றி ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையாலேயே, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகக் குறுகிய காலத்தில் ஓரளவாவது மீளக் கட்டியெழுப்ப முடிந்தது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் மாவட்டச் செயலர் சரத் சந்திரவின் வரவேற்புரையும், அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் உரையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில்:
‘பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இத்தகையதொரு பேரிடருக்கு முகங்கொடுக்காத வகையில், நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும் இதனையே வலியுறுத்தி வருகின்றார். எமது பொறுப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையைத் திரும்புவதுடன் நின்றுவிடாது, அழிவடைந்து போன அவர்களின் வாழ்வாதாரங்களையும் முழுமையாக மீளக் கட்டியெழுப்புவதாக அமைய வேண்டும், என்று சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் பேரிடர் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. மேலும், கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், மாவட்டம் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.









