“பல்கலைக்கழகத்தின் துணையுடன் வடக்கின் விவசாயத்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!” – கிளிநொச்சி விவசாய பீடக் கலந்துரையாடலில் ஆளுநர் அழைப்பு

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக்கூடிய விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், அத்துறையின் மேம்பாட்டுக்கும் பல்கலைக்கழகங்கள் எமது திணைக்களங்களுக்குத் தோள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறான கூட்டு முயற்சியின் ஊடாக, எதிர்காலத்தில் எமது மாகாணத்தின் விவசாயத் துறையில் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள விவசாய பீடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2025), பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,

‘மாகாண விவசாயத் திணைக்களங்கள், மத்திய கமநல அபிவிருத்தித் திணைக்களம், பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களுக்கு இடையில் வலுவானதொரு வலையமைப்பை உருவாக்குவதே எமது நோக்கமாகும். விவசாயத்துறையை காலத்துக்கு ஏற்றவாறு நிலைத்து நிற்கக்கூடிய, உற்பத்தித் திறன்மிக்க மற்றும் நிலையான ஒரு முயற்சியாக மாற்றுவதே எமது கூட்டு இலக்காக அமைய வேண்டும்.

நவீன நடைமுறைகள் மற்றும் புத்தாக்கத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாகவும், அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் ஊடாகவும், அடுத்த சந்ததியினரை விவசாயத்தை ஒரு கௌரவமான மற்றும் இலாபகரமான தொழிலாகத் தழுவிக்கொள்ளத் தூண்ட முடியும். இது உற்பத்தித் திறனை அதிகரிப்பதனூடாக மாகாணத்தின் மொத்தத் தேசிய உற்பத்திக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், நவீன கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் விவசாய நிலங்களை விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும். எமது விவசாயிகள் குறைந்த உற்பத்திச் செலவில் கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். இதற்குரிய தொழில்நுட்பத்தைக் களத்தில் நிற்கும் விவசாயிகளிடத்தில் கொண்டு செல்வதற்குப் பொருத்தமான தரப்பாகப் பல்கலைக்கழகம் இருக்கும் என நான் நம்புகின்றேன்.

விவசாயிகளின் உற்பத்திகள் தொடர்பான தரவுகள் தற்போது துல்லியமாக இல்லை. அத்தரவுகள் துல்லியமாக இருக்குமாயின், எந்தக் காலப்பகுதியில் என்ன விளைச்சல் வரும் என்பதைக் கணிப்பிட்டு, அதற்கு ஏற்றவாறு இறக்குமதியைத் தடை செய்யவோ அல்லது வரியை அதிகரிக்கவோ அரசாங்கத்திடம் கொள்கை ரீதியாகக் கோரலாம். இதற்கு அடிப்படையான துல்லியமான தரவுகளைத் திரட்டுவதற்குப் பல்கலைக்கழகத்தின் உதவியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போதைய மத்திய அரசாங்கத்தின் கீழ் எமக்குச் சாதகமான சூழல் காணப்படுகின்றது. மத்திய விவசாய அமைச்சு நாம் கோருவதை வழங்குவதற்குத் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பல்கலைக்கழகமும் எங்களுடன் கைகோர்ப்பதன் ஊடாக வடக்கின் விவசாயத்தில் சிறந்ததொரு அத்தியாயத்தை ஏற்படுத்தலாம், என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய விவசாய பீடத்தின் பீடாதிபதி, கடந்த காலங்களில் விவசாய பீடத்தால் சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், பல்கலைக்கழகமும் விவசாயத்துடன் தொடர்புடைய திணைக்களங்களும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது குறித்தும், மாகாணத்துக்கான விவசாய அபிவிருத்தித் திட்டத்தை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர், மேலதிக மாகாணப் பணிப்பாளர், மாவட்டப் பணிப்பாளர்கள், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநல சேவைகள் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் விவசாய பீட விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.