“சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைக்கு அமைவாக “உழைக்கும் நாடு, உற்பத்தி செய்யும் குடிமகன், மகிழ்சியான குடும்பம்” என்ற தொனிப்பொருளில் 200 பற்றிக் கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட “பற்றிக் பயிற்சி நிலையம் -புங்குடுதீவு யாழ்ப்பாணம்” திறப்புவிழா மற்றும் ஆரம்ப நிகழ்வு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், யாழ் அரசாங்க அதிபர், வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், இராஜாங்க அமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மிக திறமையாக செய்யக்கூடியவர் எனவும் நேற்று அவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது “புடவை கைத்தொழிலை எவ்வாறு மாற்றம் செய்யலாம் மற்றும் எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்” என அவருடைய திட்டங்களை கூறியதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடமாகாணத்தில் இத் தொழிற்துறை மிகவும் பின்தங்கிய ஒரு நிலையில் காணப்படுவதாகத்தான் எல்லோராலும் பார்க்கப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டியதோடு இத்துறையில் உள்ள ஆளணி மற்றும் ஏனைய பற்றாக்குறைகள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
மேலும் கடந்த வருடம் இந்த தொழில் நிலையத்திலே உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இங்குள்ள வைத்தியசாலைகளில் கொள்வனவு செய்ய கூறியதாகவும் அத்துடன் கல்வி அமைச்சிடம் பாடசாலை உபகரணங்கள் அனைத்தும் இத்தொழில் திணைக்களங்களூடாகவே திருத்தம் செய்யப்பட வேண்டும் என கூறியதாகவும் அதனால் இத்திணைக்களங்களுக்கு வருமானம் ஈட்டப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், இந்த வருடம் இத்துறையின் ஆளணி பற்றாகுறை நிவர்த்தி செய்யப்படும் எனவும் பயிற்சி பெறுவோர் “சௌபாக்கியா கடன் திட்டம்” மூலம் அவர்களுக்கான கடன் வசதி ஏற்படுத்தி தருவதாகவும் கௌரவ இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததாகவும் கூறினார்.
இறக்குமதி துறையிலே தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகளின் காரணமாக உள்ளூர் உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் நாட்டில் ஏற்ப்பட்டுள்ளதாகவும், இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் இச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி இப் பயிற்சி நெறியை மிகச் சிறப்பாக மேற்கொண்டு, பயிற்சி நெறி முடிவடைந்த பின்னரும் அதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.
மேலும், இப் பயிற்சி நெறியை முடித்தவர்களுக்கு அத்தொழிலை தொடர்ந்து நடத்துவதற்காக ஒரு நிலையம் ஒன்றினை அமைத்து கொடுக்கும் படி தன்னுடைய செயலாளருக்கு கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். இங்கு பயிற்சி பெறும் அனைவரும் ஒரு உற்பத்தியாளராக மாறவேண்டும் எனவும் உங்களுக்கான உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.