பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெல் விதைப்பானது பெரும் போகம் 2023/24 இல் 32 ஏக்கர் நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கான வயல் விழா நிகழ்வானது 08.02.2024 அன்று கலசியம்பலாவ கிராமத்தில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி. யு. சரத்சந்திர அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. மரியதாசன் ஜெகூ, மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் உதவிச் செயலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்டச் செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பரசூட் முறையிலான செய்கை முறையானது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அது விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடைந்திருக்கவில்லை எனவும் தற்போது மேம்படுத்தப்பட்ட பரசூட் விதைப்பு முறையானது இலாபகரமானதும் விவசாயிகள் இலகுவில் கைக்கொள்ளக்கூடியதும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந் நிகழ்வில் பிரதேச விவசாயப் போதனாசிரியரினால் வருகை தந்த விவசாயிகளுக்கும், பிரமுகர்களுக்கும் பரசூட் முறையிலான நெல் நெற்கை முறைபற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

பரசூட் முறையிலான நெல் விதைப்பினால் பின்வரும் அனுகூலங்கள் கிடைக்கின்றது.
குறைந்தளவிலான விதை நெல் (ஏக்கருக்கு 10 – 12 கிலோகிராம்).
குறைந்தளவிலான மற்றும் வினைத்திறனான பசளைப் பாவனை (ஏக்கருக்கு 12 கிலோ TSP).
நோய் மற்றும் பூச்சிப் பீடைத் தாக்கம் இல்லை.
களை நாசினிப் பாவனை இல்லை.
பயன்தரும் மட்டங்களின் எண்ணிக்கை அதிகம் (12 – 16 மட்டங்கள்).
விளைச்சல் அதிகம் (எதிர்பார்க்கப்படும் விளைச்சல் ஏக்கருக்கு 120 – 150 புசல்).
உற்பத்திச் செலவு குறைவு (கிலோவிற்கு 66.78 ரூபா).