வடக்கு மாகாணத்திலுள்ள சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும், நுண்நிதிக் கடன் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2026) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இச்சந்திப்பின்போது, சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துத் தீவிரமாகக் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக, எமது மாகாணத்தினுள் மாவட்டங்களுக்கு இடையில் கூட்டுறவுச் சங்கங்களின் வட்டி வீதங்களில் காணப்படும் வேறுபாடுகள் குறித்தும், அம்முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டது. அங்கத்தவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் சீரான வட்டி வீத முறைமையைப் பேணுவதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, கிராமப்புறப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நுண்நிதி நிறுவனங்களின் கடன் பொறியில் இருந்தும், அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளிலிருந்தும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் கூட்டுறவுச் சங்கங்களின் பங்கு இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்காலத்தில் எமது மக்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகாத வகையில், கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக இலகுவான மற்றும் நியாயமான வட்டி வீதத்தில் கடன்களை வழங்குவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது குறித்தும், சங்கங்களின் எதிர்காலச் செயற்பாடுகளை எவ்வாறு மக்கள் நலன் சார்ந்து முன்னெடுப்பது என்பது குறித்தும் இதன்போது ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர், சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





