நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு 4 பொறியியலாளர்களும், 39 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் நியமனம்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும், நிதி ஆணைக்குழுவும் அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கு மத்திய அமைச்சுக்களின் நிதிகளை நேரடியாக வழங்குவது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கு மிகப்பெரிய பாய்ச்சல் மிக்க ஆண்டாகவே அமையப்போகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை பொறியியல்சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை (12.11.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில் தெரிவித்ததாவது,

இன்று நாம் வடக்கு மாகாணத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் ஒன்றுகூடியுள்ளோம் — நீண்ட இடைவெளிக்குப் பிறகு 4 பொறியியலாளர்களையும், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 39 பேரையும் எங்கள் மாகாண சேவைக்கு வரவேற்கின்றோம். இந்த நியமனம், வெறும் ஒரு பணியிடப் பதவி அல்ல — இது எங்கள் மாகாணத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய நம்பிக்கையின் தொடக்கம்.

மதிப்புக்குரிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழு பல்வேறு பரிசீலனைக்குப் பின்னர் ஒவ்வொரு மாகாணத்துக்கும் நியமனங்களுக்கான அனுமதியை வழங்கியிருக்கின்றது. முதலில் அதற்கு அவர்களுக்கு நன்றிகளைக் கூறுகின்றேன். வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு துறைகளிலும் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 551 பேரை உள்வாங்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம்.

தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 75 பேரை சேவையில் உள்வாங்க அனுமதி கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் நாங்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு ஊடாக விண்ணப்பங்களைக் கோரினோம். எங்களுக்கு நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அதன் பின்னர் தகுதியான விண்ணப்பதாரிகளை பரீட்சைக்கு அழைத்திருந்தோம். பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டனர். அவர்களிலிருந்து வடிகட்டப்பட்டே நீங்கள் 39 பேரும் இன்று நியமனம் பெறுகின்றீர்கள். இது உங்கள் திறமையையும் உழைப்பையும் பிரதிபலிக்கும் பெருமைக்குரிய தருணம்.

இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றேன். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் கோரப்பட்ட பல்வேறு துறைகளுக்கும் அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. வேலை வாய்ப்புக்காக இன்னும் பலர் காத்திருக்கின்றனர். அவர்களின் வாய்ப்புக்களைத் தட்டியே நீங்கள் இந்த நியமனத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் ஓய்வுகாலம் வரையில் நீங்கள் பணியாற்றவேண்டும். இன்று நியமனத்தைப் பெற்றுவிட்டு இடையில் பணியை விட்டு விலகிச் செல்வது, உங்களுடன் போட்டியிட்டும் வாய்ப்பு பெறாத பலருக்கு நீங்கள் செய்யும் அநீதியாகும். இதை நினைவில் கொள்ளுங்கள்.

எமது மாகாணத்தின் பல திணைக்களங்கள் இன்று உங்களின் சேவையை எதிர்நோக்கியுள்ளன. அது உங்கள் பணியின் பெறுமதியை வெளிப்படுத்துகிறது. அபிவிருத்தி நோக்கில் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.

அதுவும் வடக்கு மாகாணத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கடந்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டதுடன் அடுத்த ஆண்டும் அதைவிட அதிகமான நிதி ஒதுக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும், நிதி ஆணைக்குழுவும் அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கு மத்திய அமைச்சுக்களின் நிதிகளை நேரடியாக வழங்குவது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கு மிகப்பெரிய பாய்ச்சல் மிக்க ஆண்டாகவே அமையப்போகின்றது.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை அல்லது ஒதுக்கப்பட்ட நிதிகளும் அரசியல்வாதிகளுடைய தலையீடுகளுடனே திட்டங்களை நடைமுறைப்படுத்த விடுவிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது அவ்வாறான நிலைமையில்லை. பல மடங்கு நிதி ஒதுக்கப்படுவதுடன் எந்தவொரு தலையீடும் இல்லாமல் திட்டங்களை அதுவும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை அடையாளப்படுத்தி முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புள்ளது. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்குமே அபிவிருத்தியில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியிருக்கின்றது. அதைக் கருதிலெடுத்தே நீங்களும் பணியாற்றவேண்டும்.

மக்களின் வீடுகள், மதில்கள், கட்டடங்கள் கட்டுவதற்கான அனுமதி விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதிலும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பங்கு அளப்பரியது. மக்களுடன் நேரடியாகத் தொடர்புபடும் இத்தகைய வேலைகள் கடந்த காலங்களில் இழுத்தடிக்கப்பட்டிருந்தன. தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை என்பது ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் வேறு எதையோ எதிர்பார்த்தும் அவை நடைபெற்றிருந்தன.

உறவினர் அல்லது பினாமி பெயர்களின் மூலம் ஒப்பந்தங்களைப் பெறுதல், வேலைத்தளங்களை நேரடியாகப் பார்வையிடாமல் கையொப்பமிடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொடர்பாக மக்களிடமிருந்து முன்வைக்கப்படுகின்றன. மனச்சாட்சியுடன் நேர்மையாகச் செயற்படும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் இவ்வாறான ஒரு சிலரின் தவறால் மனஉளைச்சலை சந்திக்க நேரிடுகின்றது.

நீங்கள் கடுமையான போட்டிக்குள் வென்று, பல கனவுகளுடன் இந்தச் சேவைக்கு வந்துள்ளீர்கள். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற இலக்கு உங்களிடம் உறுதியுடன் இருக்கும். திணைக்களங்களில் இணைந்த பின், சிலரால் உங்கள் கனவுகள் அல்லது இலக்குகள் திசைதிருப்பப்படாதபடி உங்களையே நீங்கள் காக்க வேண்டும். தவறு செய்பவர்கள், மற்றவர்களையும் தவறு செய்யத் தூண்டுவார்கள். அதில் ஈடுபட்டால், உங்கள் கனவையும் இலக்கையும் நீங்களே புதைத்து விடுவீர்கள்.

எங்கள் அரச பொறிமுறை 77 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் சில பழமையான குறைகள் இன்னும் நிலவுகின்றன. அவற்றை மாற்றுவது எளிதல்ல. ஆனால், அந்தச் சங்கிலியை உடைக்க முன்வரும் தலைமுறையாக நீங்கள் இருக்க வேண்டும். அந்த தொடர் ஊழல், அலட்சியம், இலஞ்சம் என தொடராமல், அதனை முறியடிக்கும் தலைமுறையாக நீங்கள் மாறுங்கள்.

உங்கள் கடமையை பெருமையுடனும் பொறுப்புடனும் ஏற்று, மக்களுக்காக அக்கறையுடனும் திறமையுடனும் சேவை செய்யுங்கள். உங்கள் உழைப்பும் நேர்மையும் வடக்கு மாகாண மக்களுக்காக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கட்டும்.

நாளைய தினம், உங்கள் செயல்பாடுகள் வழியாக மாற்றம் உருவாகும் என நான் நம்புகிறேன். மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் — உங்கள் புதிய பயணம் அர்த்தமுள்ளதாய், மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையட்டும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், பொறியியல், ஆளணியும் பயிற்சியும், ஆளுநரின் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.