நிபந்தனைகளுடனேயே தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவை மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கும் அதிகாரங்கள் உள்ளன – ஆளுநர்

எமது மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பாளர்களும் தொழில்வாண்மை மிகுந்தவர்களாக தற்போதைய யுகத்துக்கு ஏற்றவர்களாக மாறவேண்டும். தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி தேசிய தொழில்முறை தகுதிச் சான்றிதழை (NVQ) எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுக்கூட்டம் தந்தைசெல்வா அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (07.10.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

நான் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் இரண்டு தடவைகள் உங்கள் சங்கத்தினர் என்னை வந்து சந்தித்திருந்தார்கள். சங்க அங்கத்தவர்களிடையே கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் தொடர்பில் இறுக்கமான – ஒழுக்கமான நடைமுறை தேவை என அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஒழுங்குமுறைகள் – கட்டுப்பாடுகளை பலர் விரும்புவதில்லை. ஆனால் உங்கள் சங்கம் அதனைத் தேடி வந்து நடைமுறைப்படுத்துமாறு கோரியது பாராட்டுக்குரியது. அதேபோல உங்கள் சங்கம் மற்றும் சமாசம் எடுக்கின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்கவேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்கள் சில நிபந்தனைகளுடனேயே உங்களின் தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்குகின்றன. அவை உங்களால் மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன. எனவே ஒழுங்குமுறைக்கு உட்பட்டு செயலாற்ற வேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கவேண்டும். எமது சமூகம் தொடர்பான கரிசனையுடன் பணியாற்றவேண்டும். நீங்கள் சங்கமாக – சமாசமாக ஒற்றுமையுடன் இருக்கும்போதுதான் எளிதில் சாதிக்க முடியும். எதிர்காலத்தில் சிறப்பான தொழில்வாண்மையுள்ளவர்களாக நீங்கள் மிளிர்வதற்கு வாழ்த்துகின்றேன், என்றார்.

இந்த நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், சங்கத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளரும் கலந்து கொண்டு தொழில்வழிகாட்டல் அறிவுரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.