நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு விடாது அவற்றை படிக்கற்களாக மாற்றவேண்டும் – ஆளுநர்

சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்று லண்டனுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்த மாணவன் கூறியதைப்போன்று, கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எம்மால் எதையும் சாதிக்க முடியும். அதை நான் பல இடங்களில் கூறியிருக்கின்றேன். நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு போகக் கூடாது. அதை படிக்கற்களாக மாற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும், கணித விழா – 2025 நிகழ்வு வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை (23.08.2025) இடம்பெற்றது. இதில் இரண்டாவது அமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில்,

இலங்கை முழுவதும் 15 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட பரீட்சையை நடத்தி இவ்வாறான நிகழ்வை நடத்துவது மிகக் கடினமானது. அதைத் திறம்படச் செய்து முடிதுள்ளீர்கள்.

இந்த நிகழ்வில் அனுபவப் பகிர்வுகளை வழங்கிய மாணவர்கள் ஒரு விடயத்தை அழகாகக் குறிப்பிட்டிருந்தார்கள். சிதம்பரா கணித பரீட்சை போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தோற்றியபோதும் பரிசில் கிடைக்கப்பெறவில்லை என்றும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயன்று இறுதியில் முதலிடம் பெற்று லண்டன் சென்று வந்ததாகத் தெரிவித்திருந்தார். அதுதான் உண்மை. நாம் முயன்றால் எம்மால் முடியாதது என்று எதுவுமில்லை. வெற்றி பெறவில்லை என்றால் நாம் துவண்டு போகக் கூடாது. அதை வலிமையாக்கி இன்னும் ஊக்கமாகப் போட்டியிட வேண்டும். எமது முயற்சிக்கு வெற்றி கிடைக்காமல் போகாது.

அதைப்போல இந்தப் பரீட்சைகள் ஊடாக எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த நிலையை அடைந்த பின்னர், அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும். இந்தச் சமூகத்துக்கு உதவ வேண்டும். இது அஞ்சலோட்டம் போன்று தொடரவேண்டும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் சிதம்பரா கணிதப் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பனவற்றையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.