நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நடைபெற்றது.

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, டான் தொலைக்காட்சி குழுமத்தின் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை (23.12.2025) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆளுநர் அவர்கள் அஞ்சலிச் சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணிக்கூட்டு கோபுரத்தின் மின் அலங்காரங்களை ஒளிரச் செய்து வைபவத்தை ஆரம்பித்து வைத்தார்.

மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக யாழ். மாவட்டத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு டான் தொலைக்காட்சி குழுமத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், யாழ். மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி வி.மதிவதனி ஆகியோர் கலந்துகொண்டனர்.