வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற, த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை காலை (17.11.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து முன்னேற்றங்களை விவரித்தனர்.
வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாநாட்டின் ஒருங்கிணைப்பு, முதலீட்டாளர்கள் பங்கேற்பு மற்றும் வடக்கின் முக்கிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டுக்கான தலைவர் கௌஷால் இந்திக ராஜபக்ஷ, தேசிய தொழில் முயற்சி அதிகார சபைத் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர, வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டுக்கான இணைத் தலைவரும் த மனேஜ்மன்ட் க்ளப் முகாமைத்துவ சபையின் துணைத் தலைவர் – நிதி சமிந்த ஹூலங்கமுவ, த மனேஜ்மன்ட் க்ளப் முகாமைத்துவ சபையின் துணைத் தலைவர் – நிர்வாகம் சாந்தி பகீரதன், த மனேஜ்மன்ட் க்ளப் முகாமைத்துவ சபையின் முன்னாள் தலைவர் தீபால் அபயசேகர, ஜூட் மனோகரன், த மனேஜ்மன்ட் க்ளப் – யாழ்ப்பாணத்தின் தலைவரும், வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டுக்கான இணைத் தலைவருமான அனு ராகவன், த மனேஜ்மன்ட் க்ளப் – யாழ்ப்பாணத்தின் செயலாளர் எஸ்.சுகிர்தரூபன், த மனேஜ்மன்ட் க்ளப் – யாழ்ப்பாணத்தின் உபதலைவர்களான நிசாந்தன் கருணைராஜ் மற்றும் வி.நிறஞ்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டுக்கான பங்காளர்களான ஹற்றன் நஷனல் வங்கியின் யாழ். பிராந்திய முகாமையாளரும் கலந்துகொண்டார்.






