தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் புதிய தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

அரசாங்கம் உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற போதிலும், அத்தகவல்கள் உரிய காலத்தில் தொழில் முயற்சியாளர்களைச் சென்றடைவதில்லை என்ற விடயம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், அதிக தேவைப்பாடுள்ள வடக்கு மாகாணத்திலேயே இத்தகைய கடன்களைப் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகின்றமை குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

வங்கிகளின் கிளை முகாமையாளர்கள் சில கடன் திட்டங்களுக்கு மேலதிக நிபந்தனைகளை விதிப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதேவேளை, வடக்கில் பல தொழில் முயற்சியாளர்கள் முறையான ‘வியாபார பெயர்ப் பதிவை’ மேற்கொள்ளாமை மற்றும் வங்கிகளின் அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறுவதாலேயே கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழப்பதாக வங்கி முகாமையாளர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இச்சவால்களை முறியடிக்கும் வகையில், தொழில் முயற்சியாளர்களுக்குக் கடன் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும், வங்கிகளின் நிபந்தனைகள் குறித்துத் தெளிவுபடுத்துவதற்கும் புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய அலுவலகத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு வங்கியின் பங்களிப்புடன், தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் கருத்தரங்குகளைத் தொடர்ச்சியாக நடத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர், அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுடன் தொடர்புடைய அரச திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டனர்.