எமது மக்கள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். பெரும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கின்றார்கள். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது எமது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த அடிப்படையில், எமது மக்களின் எதிர்பார்ப்புகளும் இக்காலப்பகுதியில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் நிச்சயம் நிறைவேற்றப்படும் என நான் முழுமையாக நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘பொங்கல் விழா’ இன்று (15.01.2026) வியாழக்கிழமை வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்தார்.
வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து வரவேற்புரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது:
இன்றைய நாள் தமிழ் மக்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாளாகும். சூரியனுக்கும், சேற்றில் கால் பதிக்கும் உழவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாக இது அமைகின்றது. இத்தகையதொரு சிறப்பான நாளில், நாட்டின் தலைவர் எம்முடன் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாடுவது எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பே எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் வீசிய ‘டித்வா’ புயல், எமது மாகாணத்தில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பேரிடர் வேளையில், உடனடி நிவாரணங்களை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்டெடுத்து, மீண்டும் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதுக்கும் ஜனாதிபதி அவர்கள் வழங்கிய உடனடிப் பணிப்புரைகளுக்கு, மாகாண ஆளுநர் என்ற வகையில் நான் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உண்மையில், சாதாரண மக்களின் வலிகளை நன்கு தெரிந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றமையால்தான், இந்த இழப்பீடுகள் அனைத்தும் இவ்வளவு வேகமாக எமது மக்களை வந்து சேர்ந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாது, எமது மாகாணத்துக்கு அடிக்கடி நேரில் விஜயம் செய்து, இங்குள்ள நிலைமைகளையும் மக்களின் பிரச்சினைகளையும் அவதானிக்கும் ஒருவராகவும் அவர் இருக்கின்றார்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்க்கையைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்புவது மாத்திரமல்லாது, அவர்கள் முன்னர் இருந்த நிலையை விடச் சிறப்பானதொரு நிலையை அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில், மாகாண நிர்வாகம் முன்னெடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்து வருகின்றது.
எமது மக்களின் துயர் துடைக்கவும், அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்கவும், எம்மோடு இணைந்து பண்டிகையைக் கொண்டாடவும் வருகை தந்துள்ள மாண்புமிகு ஜனாதிபதி அவர்களையும், ஏனைய விருந்தினர்களையும் வடக்கு மாகாண சபை சார்பில் அன்போடு வரவேற்கிறேன், என்றார்.
இந்நிகழ்வில், அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து வேலணைப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.றஜீவன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர் ஆகியோரும் உரையாற்றினர். அதன் பின்னர் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
வடக்கு மாகாண விவசாயம் மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.










