புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தேராவில் விவசாயப் பண்ணையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அங்கு விவசாய நடவடிக்கைகளை மீளச் சீரமைத்து விரிவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தேராவில் விவசாயப் பண்ணையில் தலா ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட வாழைச் செய்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில், அங்கு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்த விவசாயிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, ஆளுநர் இன்று (01.10.2026) வியாழக்கிழமை நேரடியாக தேராவில் விவசாயப் பண்ணைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் தேராவில் விவசாயப் பண்ணை விவசாய நடவடிக்கைகளுக்காக இயங்கி வந்தது. அதைமேலும் வினைத்திறனாக்கும் நோக்கில், கடந்த ஆண்டு 40 ஏக்கர் காணி விவசாயிகளுக்கு வாழைச் செய்கைக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட்டது. எனினும், போதிய நீர் விநியோக வசதி இன்மை மற்றும் யானைகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் எதிர்பார்த்த பயனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, யானைத் தடுப்பு வேலி உரிய முறையில் அமைக்கப்படாததுடன், விவசாயத்துக்குத் தேவையான போதிய நீராதாரமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
யானைகள் விவசாயப் பகுதிக்குள் நுழைந்து தடுப்பு வேலியை சேதப்படுத்தியதுடன், காய்ப்பிற்கு வந்திருந்த வாழை மரங்களை அழித்ததாகவும், அதனைத் தொடர்ந்து கால்நடைகள் விவசாய நிலத்துக்குள் நுழைந்து எஞ்சிய பயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்தியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க, யானைத் தடுப்பு வேலியை முறையாக அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், விவசாயத்துக்குத் தேவையான நீரை ஒழுங்குபடுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்த ஆளுநர், நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, யானைத் தடுப்பு வேலியை முறையாக அமைத்தல், தேவையான நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் உரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதேவேளை, ஏற்கனவே ஏற்பட்டுள்ள பயிர்ச்செய்கை இழப்புகளை கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய குறுகிய காலப் பயிர்ச்செய்கை வாய்ப்புகள் தொடர்பிலும் ஆராயுமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.
தேராவில் விவசாயப் பண்ணையின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த ஆளுநர், பண்ணையில் காணப்படும் குறைபாடுகளை ஒவ்வொன்றாக அடையாளப்படுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதன் ஊடாக, இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஆளுநரின் இக் களப்பயணத்தின்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி கே.டென்சியா, வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், விவசாயப் பண்ணை முகாமையாளர், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


