தேன் உற்பத்திக்காக தேனீவளர்ப்பினை அபிவிருத்தி செய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் தொடர்பான பயிற்சி நெறியைத் தொடர்ந்து அவ் விடயம் தொடர்பான கல்விச் சுற்றுலாவானது 27.02.2020 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் பாலம்பிட்டி விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள கீரிசுட்டான் எனும் கிராமத்தின் காட்டுப் பகுதிக்கு, வடமாகாண விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள்
உள்ளிட்ட 40 பேரைக் கொண்ட குழுவினர் இக்களச் சுற்றுலாவில் ஈடுபட்டனர். இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக சுவீடன் விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் தகைநிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் திருமதி.லோட்டா கிறிஸ்ரியன்சன் அவர்களும் கலந்துகொண்டனர்.
இக் களச்சுற்றுலாவின் போதுகீரிசுட்டான் காட்டுப் பகுதியில் ஓர் மரப்பொந்தினுள் காணப்பட்ட தேனீக்குடி அடையாளம் காணப்பட்டு தேனீப் பெட்டிக்கு மாற்றுவது செய்முறையாகச் செய்து காண்பிக்கப்பட்டது. இச் செயன்முறையின் போது தேனீக்குடியானது முதிரைமரப் பொந்தினுள் காணப்பட்டதனால் இயந்திர அரிவாள் மூலமாக மரத்தை அரியும் போது ஏற்படுத்தப்பட்ட மிகையான சத்தம் காரணமாக தேனீக்குடித் தொகை அவ் இடத்தைவிட்டு அகன்று ஓர் மரக்கிளையில் தொங்கியநிலையில் காணப்பட்டது. பின்பு இராணித் தேனீயை பிடித்து தேனீப் பெட்டிக்குள் விட்டதும் தேனீக்குடித்தொகை தேனீப் பெட்டியினுள் குடிபெயர்ந்தது.