தேசிய தொழிற் தகமை – கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித் தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் திட்டம் – வடக்கு மாகாணம்

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ரூபா 12 மில்லியன் நிதி உதவியின் கீழ் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின்(NAITA)பங்களிப்புடன்  தொழில்வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பல்துறை சார்ந்த 1000 பயனர்களுக்கு  தேசிய தொழிற்தகமை-கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித்தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் வடமாகாண சபையின் திட்டமானது கடந்த நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண விவசாய திணைக்களம், வடமாகாண கைத்தொழில் திணைக்களம், வடமாகாண மீன்பிடி திணைக்களம், ஆகியவற்றின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.

இதன் பிரகாரம், மேற்படி திணைக்களங்கள் தம் சார்ந்த பல்துறை பயனர்களை இனங்கண்டு முறைப்படி அவர்களினை பதிவுக்கு உட்படுத்தி மாவட்ட தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (NAITA) நிலையங்களில் பூரண பங்களிப்புடன் மிகக் குறுகிய காலத்தில் தேசிய தொழிற்தகமை (NVQ) மட்டம் மூன்று தேசிய தொழிற்தகமை(NVQ) மட்டம் 4 ஆகிய பயிற்சிநெறிக்கான நற்சான்றிதழ்களை முறைமைப்படுத்தப்பட்ட குறுகிய கால மதிப்பீட்டின் ஊடாக வழங்கும் நடவடிக்கையாக இச் செயற்திட்டம் காணப்பட்டது.

இச்செயற்திட்டமானது பயனாளிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. அந்தவகையில் கடந்த மாதம் பயனாளி ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தேசிய தொழிற்தகமை (NVQ) சான்றிதழினை பிரதம செயலாளர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள இளைஞர்கள் இவ்வாறான செயற்திட்டங்களில் பங்குபற்ற வேண்டும் என்பதற்கு இது முன்னுதாரணமாக விளங்குகிறது.