தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்தார்.

இலங்கையிலேயே முதன்முறையாக வடக்கு மாகாணத்தில் சமூக மட்டத்தினருக்கான ‘கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்’ மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியன விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இத்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) மாலை இரு கட்டங்களாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மூலகாரணமாகத் திகழும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் எம்.மலரவன் தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கும், நிதியுதவி வழங்கும் மருத்துவர் வேலாயுதம் சர்வேஸ்வரனுக்கும் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

‘இலங்கையில் எமது மாகாணத்தில் மாத்திரமே பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு இவ்வாறானதொரு கண்பரிசோதனை முகாம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன. முதலாம் கட்டச் செயற்றிட்டம் நிறைவடைந்த பின்னர் அது தொடர்பான அறிக்கை மத்திய சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போது, எமது மாகாணத்தின் இத்திட்டத்தை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய மாகாணங்களும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் நாம் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றோம்’ என ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, இம்முறை தரம் 1 இல் புதிதாக இணைந்த மாணவர்களுக்கும், கடந்த ஆண்டு பரிசோதனைகளைத் தவறவிட்ட மாணவர்களுக்கும் முன்னுரிமையளித்து இரண்டாம் கட்டத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கண் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் எம்.மலரவன், முதலாம் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இரண்டாம் கட்டச் செயற்பாடுகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், இச்செயற்றிட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு ஆளுநர் அலுவலகம் ஒரு இணைப்பு மையமாகச் செயற்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் பாடசாலைகளில் இத்திட்டத்தை முன்னெடுத்தபோது எதிர்கொண்ட சவால்களைப் பட்டியலிட்ட அவர், இம்முறை அவற்றைத் தவிர்த்து விரைவாகச் செயற்பட முடியும் என நம்பிக்கை வெளியிட்டார். மாணவர்களை அடையாளங்காண்பதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஒவ்வொரு வலயத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொத்தணிகளை உருவாக்கி சிகிச்சை முகாம்களை நடத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இம்முகாம்கள் நடைபெறும் இடங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கட்டாயம் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் இத்திட்டத்தை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது குறித்தும் தனது ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில், சில ஆரம்பச் சவால்கள் இருந்தபோதிலும் முதலாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டியதுடன், வலயக் கல்விப் பணிப்பாளர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன், கடந்த காலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்தும் பரிசோதிக்குமாறு அவர் மருத்துவ நிபுணரைக் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிடுகையில், பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைகளில் நடைபெறும் முகாம்களுக்குரிய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களைச் சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஊடாகக் கோரிப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், உரிய ஒத்துழைப்பு கிடைக்காவிடின் பிராந்திய அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அதிபர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கையிலேயே முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சமூக மட்டத்தினருக்கான ‘கிராமிய ஒளிவாழ்வுத் திட்டத்துக்கு’ மாவட்டச் செயலாளர்களின் முழுமையான ஒத்துழைப்பை ஆளுநர் இதன்போது கோரினார். இத்திட்டமானது மத்திய சுகாதார அமைச்சின் கண்காணிப்பில், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையிலேயே முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டம் தொடர்பில் விளக்கிய மருத்துவ நிபுணர் எம்.மலரவன், வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலுமுள்ள கிராமங்களை வறுமை நிலையின் அடிப்படையில் வகைப்படுத்தி அதற்கமைவாக முகாம்கள் முன்னெடுக்கப்படும் என்றார். ஒவ்வொரு கிராமத்திலும் முகாம்களை நடத்தும்போது, மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒருங்கிணைப்பதற்கு விளையாட்டுக் கழகங்கள், சமூகமட்ட அமைப்புக்கள், கள உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விசேட கண்பரிசோதனை முகாம்களுடன் இணைந்ததாக, வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகத் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொண்டு, உரிய தரவுகளை இற்றைப்படுத்தித் தேவையானவர்களுக்குச் சிகிச்சைகளை வழங்குவதற்கும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விசேட கலந்துரையாடல்களில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், மாகாண சுகாதார மற்றும் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.