‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள் தூய்மைப்படுத்தல், புனரமைத்தலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்களை தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாகாணமட்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (18.08.2025) நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், நெல்லியடி, பளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மன்னார், நானாட்டான், வவுனியா, வெங்கலச்செட்டிக்குளம் ஆகிய 9 பேருந்து நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள பிரதேச செயலர் பிரிவு ரீதியாக பிரதேச மட்டக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களின் தலைவர்களாக அந்தந்த பிரதேச செயலர்கள் இருப்பார்கள்.

இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளின் மேம்பாடுகள், விரிவாக்கம் தொடர்பிலும் அவற்றை மதிப்பீடு செய்து அறிக்கை தயாரிக்குமாறும், பிரதேச மட்டக் குழுவில் அவற்றை ஆராய்ந்து அதன் பின்னர் மாகாண மட்டக் குழுவில் அதனைச் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் இன்றைய கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

வடக்கின் சகல மாவட்டங்களினதும் பிரதான நகரங்களிலுள்ள பேருந்து நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் கிளிநொச்சி நகர பேருந்து நிலையம் தெரிவு செய்யப்படாமையால் அதனையும் இதில் உள்வாங்குமாறு போக்குவரத்து அமைச்சைக் கோருவதற்கு இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமையால் அதற்குப் பதிலாக மாங்குளம் பேருந்து நிலையத்தை இந்தத் திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு அது தொடர்பான கோரிக்கையும் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.