29 ஏப்பிரல் 2021 அன்று காலை 10 மணிக்கு வடமாகாணத்தில் தற்போதுள்ள கொவிட்-19 நிலைமை தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் பிரதமசெயலாளர் , ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச்செயலாளர் , ஆளுநரின் இணைப்புச் செயலாளர் , மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் , வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்ட அரச அதிபர்கள் , யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் , திணைக்கள தலைவர்கள் , முப்படையின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட முப்படைகளின் தளபதிகளிடம் கொவிட் -19 நிலைமை தொடர்பாக கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் , அயல் நாடான இந்தியாவில் கொவிட்-19 பரவலுக்கு, மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறியமையே தற்போது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் , அதேபோன்று எமது மக்களும் மத விழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் சுகாதார விதிமுறைகளினை பின்பற்றத் தவறுவதினால் பாரிய எதிர்விளைவுகளினை எதிர் கொள்ள நேரிடும் எனத் தெரிவித்தார். எனவே திருமண மண்டபங்களின் மொத்த கொள்ளளவில் 50 வீத நபர்களை மட்டும் அனுமதிக்கவும் ஆகக்கூடியது 150 பேர் வரையில் அனுமதிக்கமுடியும் எனவும், தொடர்ந்து பொலிசார் மற்றும் சுகாதாரப்பிரிவினரை கண்காணிப்பில் ஈடுபட்டு விதி முறைகளினை மீறுபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். மேலும் குறித்த நிகழ்விற்கு வெளி மாவட்டத்தினரை அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். அத்துடன் சினிமா திரையரங்குகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும் சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பிலும் முப்படையினருடன் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர்களிற்கு குறித்த கண்காணிப்பு தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேலும் , மக்கள் விற்பனை நிலையங்களில் பல மணி நேரம் தரித்து நின்று பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்து வீட்டிலிருந்து கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய வழிமுறைகளினூடாக தகவல் வழங்கி பொருட்களினை கொள்வனவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தவும் , மரக்கறி உள்ளிட்ட பழுதடையும் பொருட்களினை மொத்தமாக குறிப்பிட்ட இடங்களில் கொள்வனவு செய்து அதனை சிறு சிறு வியாபாரிகள் மற்றும் கிராமப்புறங்களில் விற்பனை செய்வதற்கு உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது முகப் பாதுகாப்பு கவசம் அணிவது மிகச்சிறந்த பாதுகாப்பு அணுகுமுறை எனத் தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் , வெளி மாகாணங்களுக்கு சென்று பொருட்களினை கொள்வனவு செய்து வருபவர்களின் விபரங்களை பேணி அவர்களுக்கு அடிக்கடி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு இறுக்கமான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வர்த்தக சங்கத்தினர் சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வவுனியா மாவட்ட வர்த்தகர்களில் பெரும்பான்மையினர் அடிக்கடி வேறு மாகாணங்களுக்கு சென்றுவருவதால் மேற்குறித்த நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேரூந்துகளில் ஆசனத்திற்கு அளவாக பயணிகளினை ஏற்றவேண்டும் இருந்தபோதிலும் தூர இடங்களுக்கான சேவைகளினை அந்த விதத்தில் செயற்படுத்தும் போது சேவைகளை அதிகரிப்பது தொடர்பான ஒரு வேண்டுகோளினை தனியார் மற்றும் ,லங்கை போக்குவரத்து சபையிடம் முன்வைக்க ஆலோசிக்கப்பட்டது. மேலும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் குறித்த பிரதேச மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடல்களினை ஏற்பாடு செய்து கொவிட்-19 இடர் நிலையில் பின்பற்றவேண்டிய சுகாதார விதிமுறைகள் பற்றி அறிவுறுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
அத்துடன் சந்தைகளில் வியாபாரம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தடைசெய்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது. ஏனைய நாடுகளில் கடந்த 1 ½ வருடத்தில் மக்களின் வாழ்க்கை முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் , அதே போன்று எமது மக்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் வழிகாட்டல்களை தயாரிக்க ஆலோசனை வழங்கினார்.
மேலும் எதிர்பாராத அனர்த்த நிலைமை ஒன்று ஏற்படின் அதனை எவ்வாறு கையாளுதல் என்பது தொடர்பான முன்னாயத்த திட்டம் ஒன்றினை தயாரிக்க மாகாண சுகாதார பணிப்பாளருக்கு ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டதுடன். தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் ஆரயாப்பட்டதோடு தனிமைப்படுத்தல் நிலையங்களை தேவைக்கேற்ப அதிகரிப்பதற்குரிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதற்காக மாவட்ட அரச அதிபர்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ்போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
மேலும் சட்டவிரோத மணல் அகழ்வு , கிரவல் போன்ற செயற்பாடுகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக தனக்கு அறிக்கை கிடைத்ததாக சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் , இச்செயற்பாடுகளுக்கு சில கிராம சேவகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக விவசாய செய்கைக்கு என குத்தகை அடிப்படையில் பெறப்படும் நிலங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் , இவற்றை தொடர்ச்சியாக அனுமதிப்பது சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையுமென தெரிவித்ததோடு குறிப்பாக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மட்டும் கிரவல் மற்றும் சல்லி என்பவற்றை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். குறிப்பாக மன்னார் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ,றுக்கமான நடைமுறைகளினை பின்பற்றவும் அறிவுறுத்தினார்.