தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். இதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாகும் – கௌரவ ஆளுநர்

சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக நாங்கள் மாறவேண்டும். தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். அதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாக இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி செயலகம், வடக்கு மாகாண சபை, யாழ். மாவட்டச் செயலகம், தெல்லிப்பழை, உடுவில், சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்கள் ஆகிய ஒன்றிணைந்து நடத்தும் நடமாடும் சேவை உடுவில் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) இடம்பெற்றது.

யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தனது தலைமையுரையில், பருத்தித்துறையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நடமாடும் சேவையில் 500 பேர் வரையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தபோதும் 1,567 பேர் கலந்துகொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். மக்களுக்கு தேவைப்பாடுகள் அதிகளவில் உள்ளன என்பதை இதன் ஊடாக உணர முடிவதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேச செயலர் ரீதியாக இந்த நடமாடும் சேவையை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆளுநர் அவர்கள் தனது சிறப்புரையில், இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் உளமாற்றம், சமூக மாற்றம், சுற்றாடல் மாற்றம் என்ற பல்வேறு இலக்குகளை வெற்றிகொள்ள எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தத் திட்டம் தனியே எமது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பதல்ல. எங்கள் மனங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும். மாற்றங்களை எங்களிடமிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.

இந்த நடமாடும் சேவை ஊடாக தூய்மை இலங்கை திட்டத்தின் பல்வேறு பரிணாமங்களையும் மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பரவலாக்கப்பட்டுள்ளன. இப்போது நீங்கள் உங்கள் பிரதேச செயலகங்களிலேயே அதனைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனை எமது மக்கள் உச்ச அளவில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பொதுச் சேவை என்பது மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடியதொன்றாக மாற்றமடைய வேண்டும் என்று எங்கள் ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி சொல்லி வருகின்றார். அதைச் செயலில் எங்கள் அதிகாரிகள் எண்பிக்கவேண்டும், என்றார்.

அமைச்சர் இ.சந்திரசேகர் அவர்கள் தனது பிரதம விருந்தினர் உரையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று குறிப்பிட்டார். கடந்த காலங்களில் ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் பல வரப்பிரசாதங்களை அனுபவித்ததுடன் மக்களின் வரிப்பணத்தை வீணடித்தார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படவில்லை. அமைச்சர்கள் நாங்கள் இரண்டு சம்பளத்தைப் பெறவில்லை. அதிசொகுசு வாகனங்களைப் பயன்படுத்தவில்லை. இவை மாற்றங்களில்லையா? கடந்த கால மோசடியாளர்கள் தெற்கில் கைது செய்யப்படுகின்றனர். வடக்கில் இதுவரை அப்படி நடக்கவில்லை என்று பலர் சொல்கின்றார்கள். வடக்கைச் சேர்ந்த சிலர் எதிர்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். கைதுகளும் நடக்கலாம், என்றார்.

இன்றைய நடமாடும் சேவையில் தமது சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.