செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மத்திய விவசாயத் திணைக்கள நிதி உதவியுடன் மாகாண விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்ட ரீதியில் செத்தல் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 240 பயனாளிகளிற்கு 0.25 ஏக்கர் வீதம் MICH Hy-1 வர்க்க மிளகாய் விதைகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் கொண்டச்சி விவசாய போதனாசிரியர் பிரிவில் திரு. ந. நலீன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு, 50 கிராம் விதை மிளகாய் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி டிவைனி பீரீஸின் விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி மிளகாய் செய்கை மற்றும் செத்தல் மிளகாய் உற்பத்தியின் முன்னேற்றத்தினை ஏனைய விவசாயிகள் மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திரு.S.F.C உதயசந்திரன் தலைமையில் 13.03.2024 அன்று அறுவடை வயல்விழா இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கமநல சேவைநிலைய உத்தியோகத்தர்கள், நீர்பாசன துறை சேர்ந்த உத்தியோகத்தர்களுடன் கமக்கார அமைப்பு தலைவர்கள் மற்றும் கிராம விவசாயிகளும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திரு. S.F.C. உதயசந்திரன் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் போதியளவு மிளகாய் செய்கை மேற்கொள்ளப்படினும் செத்தல் மிளகாய் உற்பத்தியானது விவசாயிகள் மட்டத்தில் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. பச்சை மிளகாய்க்கான கேள்வி மற்றும் செத்தல் மிளகாய் உற்பத்திக்கான காத்திருப்பு போன்றவற்றால் விவசாயிகள் மட்டில் செத்தல் மிளகாய் உற்பத்திக்கான நாட்டம் குறைவாக காணப்படுகின்றது என்றம் மேலும் வழங்கப்பட்ட MICH Hy-1 வர்க்கமானது செத்தல் மிளகாய்க்கு ஏற்ற நிறை நிறம் மற்றும் கூடிய காரத்தன்மை கொண்டதாக காணப்படுவதால் இது செத்தல் மிளகாய் உற்பத்திக்கு ஏற்ற வர்க்கம் எனவும் கருத்து தெரிவித்தார்.

குறித்த செய்கையில் ஈடுபட்ட திரு ந. நலீன் தனது அனுபவ பகிர்வில் முதல் அறுவடையில் 550 கிலோ கிராம் விளைச்சலை பெற்றதாகவும் அவற்றில் 300 கிலோ கிராம் பச்சை மிளகாயானது தற்சமயம் செத்தல் மிளகாய் உற்பத்திக்காக உலர விடப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் குறித்த வயல் விழாவில் கருத்து தெரிவித்த மறுவயல் பயிர்கள் பாட விடய உத்தியோகத்தர் திரு. S.A.J. லெம்பேட் மிளகாய் செய்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விவசாய நடைவடிக்கைகளையும் நாற்றுமேடையின் அவசியத்தை பற்றிய விளக்கத்தையும் வழங்கினார். மேலும் மிளகாய் செய்கையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரதான சவால்களை பற்றியும் அவற்றிற்கான சாத்தியப்பாடுடைய தீர்வுகளை பற்றியும் தெளிவுபடுத்தினார்.

மேலும் குறித்த பகுதி விவசாய போதனாசிரியரால் மிளகாய் செய்கை பற்றிய மேலதிக விளக்கங்களை வழங்கியதுடன் செத்தல் மிளகாய் உற்பத்தி மற்றும் களஞ்சியப்படுத்தல் தொடர்பான விளங்கங்களும் வழங்கப்பட்டது.