“சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஊடாக வடக்கின் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பரந்தளவிலான தொழில் வாய்ப்புகள் கிட்டும்!” – ஆளுநர் நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைப் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்ற போதிலும், அத்துறையில் போதியளவான பயிற்றப்பட்ட ஆளணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனினும், தற்போதைய இளைய சமூகம் சுற்றுலாத்துறை சார் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் உள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை மேலும் விரிவடையும்போது, அதற்கான ஆளணிகளை இங்கிருந்தே வழங்கக்கூடிய சூழல் உருவாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை வெளியிட்டார்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாண சுற்றுலா விருதுகள் – 2025’ மற்றும் ‘இராமாயணம்’, ‘முருகன்’ ஆகிய ஆன்மீகச் சுற்றுலாத் தடங்கள் தொடர்பான நூல் வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) மாலை, யாழ்ப்பாணம் ‘ஜே ஹோட்டலில்’ நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், வடக்கின் சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துத் தெரிவிக்கையில்:

எமது மாகாணத்தில் மறைந்து கிடக்கும் பொக்கிஷங்கள், புராதனத் தலங்கள், அமைதி தவழும் கடற்கரைகள் மற்றும் உயிரோட்டமுள்ள பாரம்பரியங்களை மிக அழகாக வெளிப்படுத்தும் வகையில் ‘முருகன் ஆன்மீகச் சுற்றுலாப் பாதை’ மற்றும் ‘இராமாயண ஆன்மீகச் சுற்றுலாப் பாதை’ ஆகிய இரண்டு முக்கிய நூல்களை வெளியிடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். இவ்வெளியீடுகளானவை, வருகை தருவோரை வடக்கின் உண்மையான சாராம்சத்தை ஆழமாக ஆராய்ந்து அனுபவிப்பதற்குத் தூண்டும் விலைமதிப்பற்ற வழிகாட்டிகளாக அமையும்.

எமது பிராந்தியங்களுக்கிடையில் நிலவும் வலுவான வரலாற்று மற்றும் ஆன்மீகத் தொடர்புகள் காரணமாக, இம்முயற்சிகள் இந்தியாவிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை நிச்சயம் அதிகரிக்கச் செய்யும். மிக முக்கியமாக, எமது மாகாணத்தின் மொத்த உற்பத்தியில் செழிப்பான சுற்றுலாத்துறையானது இன்றியமையாத பங்களிப்பைச் செலுத்துகின்றது. இது நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான முயற்சிகளின் வளர்ச்சிக்கும் வித்திடுகின்றது.

வடக்கை நோக்கி வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதனை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தலைமையிலான அரசாங்கம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது. அதேபோன்று காங்கேசன்துறை துறைமுகமும் பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு மேலும் அபிவிருத்தி செய்யப்படும். இவையிரண்டும் நிறைவடையும்போது, வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும்.

தற்போதைய நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பயணத் தூரம் மற்றும் அதற்கான நேரம் என்பன சுற்றுலாப் பயணிகளைப் பொறுத்தவரையில் சிரமமானதாக உள்ளன. எனவே, கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு உள்ளூர் விமானச் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இந்த நெருக்கடிகளைக் குறைக்க முடியும் என நான் நம்புகின்றேன். அரசாங்கம் இது தொடர்பில் சாதகமான பார்வைகளையே கொண்டுள்ளது.

அதேநேரம், வடக்கு மாகாணத்தில் சில காலப்பகுதிகளில் இங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களில் அறைகளைப் பெற்றுக்கொள்வது கடினமானதாக உள்ளது. அந்தளவு தூரத்துக்கு அவை நிரம்பி விடுகின்றன. எனவே, எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும்போது, அந்தத் தேவையை ஈடுசெய்யும் வகையில் முதலீட்டாளர்களால் புதிய ஹோட்டல்கள் மற்றும் தங்குமிட வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். சுற்றுலாத்துறை சார்ந்து இங்கு வளர்ச்சியடைந்து வரும் இத்தகைய வாய்ப்புகளை எமது மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்நிகழ்வில் சுற்றுலா வழிகாட்டி நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்குச் சிறப்பாகப் பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதுகளும் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்டச் செயலாளர்கள், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.எல்.நசீர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலாத் திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் ஆய்வுப் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ஜெயசூரிய ஆகியோரும், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன், பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.