சுகாதார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (05.03.2026) மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, 2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடப்பாண்டிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், அவ்வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் நிலவும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களுக்கான கேள்விப்பத்திரக் கோரல் செயன்முறைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும், வெளிநாட்டு நிதி மூலங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் எதிர்கொள்ளப்படும் தொழில்நுட்ப ரீதியான சவால்கள் மற்றும் தாமதங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் விசேடமாக ஆராயப்பட்டு, அவற்றுக்கான உரிய தீர்வுகள் எட்டப்பட்டன.

இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், ‘கடந்த ஆண்டு திட்டங்களை முன்னெடுத்தபோது எதிர்கொண்ட சவால்கள் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளை ஒரு சிறந்த அனுபவமாகக் கொண்டு, இந்த ஆண்டுக்கான திட்டங்களைத் எவ்வித தாமதங்களுமின்றித் திறம்படவும் விரைவாகவும் நிறைவு செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினார்.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர், மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.