வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமைக்கப்பட்டால் மட்டுமே, ஐந்து மாவட்ட மக்களும் அதன் நன்மைகளைச் சமமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். எனவே, மாங்குளத்தில் இத்திணைக்களத்துக்காக ஒதுக்கப்பட்ட காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ், 2025ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் குறித்த மாதாந்தக் மீளாய்வு கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (26.11.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தற்காலிகமாக கிளிநொச்சிக்கு இடமாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், எமது நீண்டகால இலக்கு மாங்குளமே ஆகும். மாங்குளத்தில் நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்ட பின்னர், திணைக்களத்தை அங்கு முழுமையாக நகர்த்த வேண்டும். அதுவே அனைத்து மாவட்ட மக்களுக்கும் இலகுவான அணுகலை வழங்கும்.
2026ஆம் ஆண்டில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் புதிய உத்வேகத்துடன் வடக்கு மாகாணத்தில் ஒரு முன்மாதிரியான திணைக்களமாகச் செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தொடர்ச்சியாகக் கூறிவந்தீர்கள். தற்போது அப்பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, இனியும் காரணங்கள் கூறிக்கொண்டிருக்காது மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் வழங்க வேண்டும்.
அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி மருத்துவமனைகளுக்குத் திடீர் களப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள உண்மை நிலவரங்களை ஆராய்வதுடன், மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிய வேண்டும். அங்கு நிலவும் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கலந்துரையாடலின்போது, சுகாதார அமைச்சு, சுகாதாரத் திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, பிரதிப் பிரதம செயலாளர்களான (திட்டமிடல், நிதி, பொறியியல் சேவை), கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், சுகாதார மற்றும் சுதேச மருத்துவத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் கணக்காளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.






