உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கவேண்டும். பிள்ளைகளை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை (18.10.2025) நடைபெற்றது.
பிரதம விருந்தினர்களாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் திருமதி சறோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் பங்கேற்றிருந்தனர். விருந்தினர்கள் சிறுவர்களால் வரவேற்கப்பட்டதுடன், சிறுவர் இல்லச் சிறுவர்களின் ஆக்கப்பொருள் கண்காட்சியையும் பார்வையிட்டனர். சிறுவர் இல்லச் சிறுவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்கள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்கள், பல்கலைக்கழகத்துக்கு தெரிவானவர்கள் எனப் பலருக்கும் சான்றிதழ்களும், காசோலைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். சிறுவர்களுக்கு தீங்கான எதையும் நாம் முன்னெடுக்கக் கூடாது.
இன்றைய தினம் சிறுவர் இல்லச் சிறார்கள் மிகச் சிறப்பான நிகழ்வுகளை வழங்கியிருந்தர்கள். அவர்களின் திறமைகளை எல்லோரும் காணக்கூடியதாக இருந்தது. அவர்களுக்கும் தத்தமது வீட்டிலிருந்துதான் வளர்கின்றோம் என்ற எண்ணம் மனதிலுருவாகும் வகையில் நாம் செயற்படவேண்டும்.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் இருந்தார்கள். இன்றும் விபத்துக்களால் பெற்றோர்களை இழந்து அநாதரவான நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றார்கள். எந்தவொரு சிறுவனுக்கும் ஆதரவில்லாத நிலைமை வரக்கூடாது. அவர்களி;ன் எதிர்காலம் பாதிக்க அனுமதிக்க முடியாது. மாகாணத் திணைக்களம் சிறுவர் இல்லங்களைக் கண்காணித்து சகல சிறுவர்களையும் அரவணைத்து அவர்களை இந்த நாட்டுக்குத் தேவையான நற்பிரஜையாக உருவாக்கவேண்டும், என்றார் ஆளுநர்.
வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் வடக்கிலுள்ள அனைத்துச் சிறுவர் இல்லங்களினதும் சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர்.