சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் மதகு அமைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையால் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளமை தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் அதனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளர் ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.
மழை காலங்களில் வெள்ளம் வழிந்தோடுவதற்கு ஏதுவாக மதகு அமைப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டு புனரமைப்பு மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தற்போது சகல தரப்பினரது இணக்கமும் பெறப்பட்டுள்ளது என சாவகச்சேரி பிரதேச செயலர் ஆளுநரிடம் தெரிவித்தார். இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளரிடம் தொலைபேசியூடாக ஆளுநர் தெரியப்படுத்தி, உடனடியாக புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.