சர்வதேச மகளிர் தினம் 2024

‘அவளையும் உள்வாங்குங்கள்: பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 2024.03.06 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

அமைச்சின் செயலாளர் திரு.பொ. வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் நலன்விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வுக்கு பார்வையாளர்களாக வருகை தந்திருந்தனர்.

பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்கும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமாக மகளிர் விவகார அமைச்சு, தொழிற்துறைத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஊhசலளயடளை என்பன இணைந்து, விழா நடைபெற்ற மண்டப வளாகத்தில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சிக் கூடங்களை அமைத்துக் கொடுத்து 2024.03.06, 2024.03.07 ஆகிய இரு தினங்களும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை விற்பனைச் செயற்பாடுகள் செவ்வனே நடைபெற உதவிகள் புரிந்தன.

மங்கல விளக்கேற்றல் நிகழ்வினைத் தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டினை பிரதிபலிக்கும் வரவேற்பு நடன நிகழ்வு பொன்னாலை சந்திரபரத கலாலயத்தினரால் அரங்கேற்றப்பட்டது.

உதவிச்செயலாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்கள் தனது தலைமை உரையில், சர்வதேச மகளிர் தினம் தோற்றம் பெற்ற வரலாறு, பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வலுவூட்டலின் மூலம் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம் என்பவற்றை வலியுறுத்தினார்.

நிகழ்வின் அடுத்த பகுதியாக ‘பெண்களின் தலைமைத்துவ ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதலுக்கும் நிறைவேற்றுதலுக்குமான மாற்றங்கள்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவர் திருமதி. கோசலை மதன் அவர்களது உரையும், ‘பெற்றோரியம்’ எனும் தலைப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமுதாய மருத்துவ அதிகாரி திருமதி. ஜோசபின் திருமகள் சிவசங்கர் அவர்களது உரையும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சர்வதேச மகளிர் தினத்திற்கான இலச்சினையை வடிவமைத்துத் தந்த ஸ்ரீPபாத தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.எஸ்.தர்மதாஸ் அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
தொடர்ந்து ‘விரலிசை கானங்கள்’ எனும் இசை நிகழ்வு மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியை திருமதி. கவிதா வாமதேவன் அவர்களின் நெறியாள்கையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் செயற்படும் குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் மகளிர் ஒன்றியப்பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து, சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்பவற்றை உள்ளடக்கிய கௌரவ ஆளுநருக்கு முகவரியிடப்பட்ட மகஜர் ஒன்றினை பிரதம செயலாளருக்கும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளருக்கும் வாசித்து கையளித்தனர்.

அடுத்த நிகழ்வாக, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் நிர்வாக உறுப்பினரும் புதுக்குடியிருப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க உறுப்பினருமான திருமதி.சுந்தரலிங்கம் கலைச்செல்வி அவர்கள் ‘கிராம மட்ட பெண்கள் அமைப்புகளின் வெற்றிக்கான வழிகள்’ என்ற தலைப்பில் செயலூக்க உரையாற்றினார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம், உடுவில் நாட்டிய கலாகேந்திராவின் நடன ஆசிரியை திருமதி.துஷ்யந்தி சுகுணன் அவர்களின் ‘மெய்ப்பாட்டினூடாக மகத்துவ பெண்கள்’ எனும் குழு நடனம் அரங்கேறியது.

அதன்பின், சிறப்பு விருந்தினரான பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் தனது உரையில், பெண்கள் முன்னேற்றம் அடைவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சமத்துவமான சிந்தனையுடன், சிறந்த செயலாற்றுகையின் ஊடாக பல்வேறுபட்ட துறைகளில் சாதனை படைத்து முன்மாதிரியான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த பாடுபட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று சாதனைப் பெண்களுக்கும் பதினைந்து பெண் தொழில் முயற்சியாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

‘பெண்களின் பொருளாதார வலுவூட்டலானது பாலின சமத்துவ உலகின் மையமாகும்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, மகளிர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களினூடாக செயற்படுத்தப்பட்டு வரும் ‘மகளிர் மகுடம்’ எனும் கடன் திட்டத்தின் மூலம், மகளிருக்கான புதிய சுயதொழில் முயற்சி மற்றும் சுயதொழில் விரிவாக்கத்திற்கான கடனானது இம்முறையும் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த ஐந்து சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபா வீதம் காசோலைகளாக வழங்கி வைக்கப்பட்டன.

சிறந்த பெண்கள் கிராம அபிவிருத்தி அமைப்புக்கள் மற்றும் சிறந்த பெண்கள் கூட்டுறவு அபிவிருத்தி சங்கங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அடுத்ததாக இடம்பெற்றது.
மேலும் ‘பெண்களின் பொருளாதார வலுவூட்டலானது பாலின சமத்துவ உலகின் மையமாகும்’ எனும் கருப்பொருளை சித்தரிக்கும் சிறந்த குறும்படம், சிறந்த புகைப்படம், சிறந்த குறும்பட திரைக்கதை, சிறந்த ஓவியம் போன்றவற்றில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த குறும்படமாக தெரிவு செய்யப்பட்ட ‘கூண்டில் பறவை’ அரங்கில் திரையிடப்பட்டது.

இறுதியாக, அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி. கு.காஞ்சனா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.