வடமாகாண மகளிர் விவகார அமைச்சும் வவுனியா மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினமானது இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய காரியாலயம், கிளிநொச்சி, தப்ரபேன் Sea Food (Pvt Ltd), மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி அணுசரணையுடன் ‘அனைவரும் சமம்’ எனும் தொனிப் பொருளில் 2020.03.10 அன்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
வட மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்றுறை, அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் இந் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், ஆளுநர், வடமாகாணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக அ.பத்திநாதன், பிரதம செயலாளர், வடமாகாணம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் திரு.சி.சத்தியசீலன், ஆளுநரின் செயலாளர், வடமாகாணம், திரு. இ.இளங்கோவன், செயலாளர், கல்வி அமைச்சு, திருமதி. ரூபினி வரதலிங்கம், செயலாளர், பேரவைச் செயலகம், எஸ்.எம்.சமன் பந்துலசேன, அரசாங்க அதிபர், வவுனியா மாவட்டம், திருமதி. சபர்ஜா குணபாலசிங்கம், உதவி அரசாங்க அதிபர், வவுனியா மாவட்டம், வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிரதேச செயலர்கள், திருமதி. கந்தையா உமா, ஓய்வு நிலை பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு, அமைச்சின் திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் பங்கு பற்றி இந் நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.
வடமாகாண மகளிர் அமைச்சின் வாழ்வாதார நிதி உதவியினூடாக ஊக்குவிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெண் சமூக மட்டங்கள், தனி நபர்களினது விற்பனை மற்றும் காட்சிக் கூடங்கள் மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்தின் நிதி உதவியுடன் கண்காட்சிக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இது பொது மக்களின் பார்வைக்காகவும் சந்தை வாய்ப்பிற்கான தொடர்பினை ஏற்படுத்துவதற்குமான சிறந்த தளமாகக் காணப்பட்டது.
தொடர்ந்து மாகாண, மாவட்ட மட்ட ரீதியில் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. தப்ரபேன் Sea Food (Pvt Ltd) இன் நிதி அனுசரணையுடன் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு பணப் பரிசில்கள் – 1ம் இடம் ரூபா.25,000, 2ம் இடம் ரூபா.15,000, 3ம் இடம் 10,000 என்ற அடிப்படையில் சமூக மற்றும் தனிநபர் ரீதியாக வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். தேசிய ரீதியில் சிறந்த வீராங்கனைகளாகத் தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட Boxers Association குத்துச் சண்டை வீராங்கனைகள் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டு கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மகளிர் மகுடம்’ எனும் விசேட கடன் திட்டத்தின் கீழ் இவ் வருடமும் ஐந்து பெண் சமூக மட்ட அமைப்புக்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் கூட்டுறவு நிதியிலிருந்து சுழற்சி முறை கடன் திட்டம் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு சங்கம் வீதம் தெரிவு செய்து வழங்கப்பட்டது.
இந் நிகழ்வினை மேலும் மெருகூட்டுவதற்காக மார்பக புற்று நோய் சம்பந்தமான விழிப்புணர்வு உரை வைத்திய கலாநிதி. சுதர்சினி விக்கினேஸ்வரன், வைத்திய அதிகாரி, தொற்றா நோய்கள், வவுனியா அவர்களினாலும் உத்வேகமூட்டும் சிறப்புரை வைத்திய கலாநிதி சரணியா சுதர்சன், வைத்திய அதிகாரி, கிராமிய சித்த ஆயுள்வேத வைத்தியசாலை, செட்டிக்குளம் அவர்களினாலும் வழங்கி நிகழ்வானது சிறப்பிக்கப்பட்டது. இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.