சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அதற்கும் அப்பால் அவரது பண்புகள் மெச்சத்தக்கன. அதனால்தான் அவர் அமரராகிய பின்பும் எல்லோராலும் நினைவுகூரப்படுகின்றார். இத்தகையோரின் வாழ்வை இன்றைய இளையோருக்கும், அதிகாரிகளுக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
சைவப்புலவர் சு.செல்லத்துரை அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் அவரது நான்காவது ஆண்டு நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும், இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (21.10.2025) அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் த.தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், சமூகத்துக்குச் சேவை செய்தவர்கள் அவர்கள் மறைந்த பின்னரும் அந்தச் சமூகத்தால் மதிப்பளிக்கப்படுவார்கள். அதற்கு சைவப்புலவர் சு.செல்லத்துரை மிகச் சிறந்த உதாரணம்.
இன்று சிலர் உயர் பதவிகளிலிருந்தாலும் அவர்கள் சமூகத்தால் கொண்டாடப்படுவதில்லை. அந்த உயர் பதவிகளிலிருப்பவர்கள் சமூகத்திலிருப்பவர்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு உதவுவதற்கு விரும்புவதில்லை. தம்மைப் பெரியவர்கள் என்று கருதி சமூகத்திலிருப்பவர்களை உதாசீனப்படுத்துவார்கள். அவர்கள் எப்போதும் சமூகத்தால் நினைவில் வைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்.
ஆனால் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள், வயதில் மூத்தவராக இருந்தாலும் இளையோருக்கும் மதிப்பு வழங்கி கலந்துரையாடும் ஒருவராகவே இருந்தார். இன்றைய அதிகாரிகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கவேண்டியிருக்கின்றது. அதிகாரிகள் தங்களை நாடி வருகின்ற பொதுமக்களை அவ்வாறு மதிப்பு வழங்கி கலந்துரையாடுவது குறைவாகவே இருக்கின்றது. பல பொதுமக்கள் இது தொடர்பில் எனக்கு தங்கள் கவலைகளைத் தெரிவித்திருக்கின்றனர். அதிகாரிகள் தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, சந்திக்க வரும் பொதுமக்களை காக்க வைப்பது, அலைக்கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் கவலைக்குரியது.
நாம் சைவப்புலவர் சு.செல்லத்துரை போன்றவர்களை நினைவுகூர்வதன் ஊடாக அவர்களின் பண்புகளை எடுத்துச் சொல்லவேண்டும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் பொது மருத்துவ நிபுணர் செ.பிரசாத் நினைவுப்பேருரையாற்றினார். இதேநேரம், ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி சிவகாமி தர்மபாலாவுக்கு தமிழ் வித்தகர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.