சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 08 ஜனவரி 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், முப்படை, காவற்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

காவற்துறை உயர் அதிகாரிகளால் வடமாகாணத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத போதை பொருட்களுடைய விபரங்கள் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் கௌரவ ஆளுநர் அவர்கள் சட்டவிரோத போதை பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் மற்றும் கொவிட்-19 தொற்றாளர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதிலும் காவற்துறையினர் சிறப்பாக செயற்படுகின்றனர் என தெரிவித்ததோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அத்துடன் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை உடல் மற்றும் உளரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், வடமாகாணத்தில் ஒரு போதை பொருள் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படவேண்டும் எனவும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் அவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பது மட்டுமல்லாது அவர்களுக்கு தொழில் ரீதியாக பயிற்சிகளை வழங்கி சமூக மட்டத்தில் அவர்களை இணைக்கும் பொழுது மீண்டும் அவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டுமென கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வீதி விபத்துகள் தொடர்பாக கலந்துரையாடிய கௌரவ ஆளுநர் அவர்கள், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் வீதி விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றது என்பதை சுட்டிக்காட்டியதோடு அதற்கான காரணங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுகொண்டார்.

மேலும், குடும்ப வன்முறை, தற்கொலை, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாணத்தில் தற்போது இதுபோன்ற விடயங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியதோடு இவற்றை தடுப்பதற்கான ஒரு சிறந்த திட்டத்தை வழங்குமாறும், தற்கொலைகள் நிகழ்வதற்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கியவாறு ஒரு அறிக்கையை தயாரித்து சமர்ப்பிக்குமாறு தெரிவித்ததுடன் சட்டவிரோத போதை பொருள் பாவனையாளர்கள் மற்றும் முகவர்கள் சம்பந்தமான தகவல்களை தெரிவிக்க, விரைவில் ஒரு தகவல் தொடர்பு மையம் ஒன்றை அமைப்பதற்கும், வடமாகாண ரீதியில் ஒரு பொது தொலைபேசி இலக்கம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.