வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் இன்று (16.04.2026) வியாழக்கிழமை நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
நெடுந்தீவில் அமைக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக, சூரிய சக்தியூடான மின் உற்பத்திப் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு, மக்களுக்கான மின் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர், அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனர். குறிப்பாக, மருத்துவர்களின் தேவை உள்ளிட்ட ஆளணிப் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை எதிர்நோக்கும் ஏனைய சவால்கள் தொடர்பில் இதன்போது ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.
இவற்றைக் கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள், மருத்துவமனையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என உறுதியளித்தார்.






